17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்தளம் ராஜா தலைமையில் பேரணி நடத்தப் பட்டது. நடைபெற்ற இந்த பேரணியில் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். பந்தளம் மருத்துவ மிசனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், வள்ளியோக்கில் உள்ள சாஸ்தா கோவில் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் சபரிமலையில் பின்பற்றப்படும் நடைமுறையைக் காப்பாற்ற வேண்டும் எனக கோரி முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்களும் திரட்டப் பட்டிருந்தனர். மகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழ்ந்த பிரம்மா, சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார். பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது. ஆனால் பந்தள இளவரசனாக மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனிடம் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார். ஐயப்பன் என்பவர் ஐயனுக்கும் அப்பனுக்குமான குழந்தை அதாவது சிவனுக்கும் திருமாலுக்கும் ஆன குழந்தை. அவர் மகிசி என்கிற பெண்ணை அழிக்கப் பிறந்தவர். அவரை புறக்கணித்த வளர்ப்புத் தாய் யொரு பெண் அவர் பெண் தொடர்பில்லாமல் காட்டில் வாழ்ந்தார். எனவே அவர் ஆண்களுக்கான தெய்வமாக போற்றிக் கொள்ளப் பட்டார். இதுதான், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப் படாததற்கான காரணமாக தொடக்கத்தில் இருந்தது. தொடக்கத்தில் பெண்கள் அறவே, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப் படாத நிலைதான் இருந்தது. பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 10 அகவைக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 அகவை தாண்டிய பெண்களும் அனுமதிக்கப் படும் நிலை உருவாக்கப் பட்டது. இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச அறங்கூற்று மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து அகவைப் பெண்களுக்கும் உள்ளது. என்று உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியது. மனு நீதிக்காக கட்டப் பட்ட, தொன்மக்கதைப் படி எப்போதும் பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்பதே உண்மை. பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது என்கிற நவீன காரணத்தை ஏற்றுக் கொண்டால் அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு சரி. பார்ப்பனியமும். பாஜகவும் விரும்புகிற ஹிந்துத்துவம், தொன்மக் கதைகளின் பாகுபாட்டோடு நால்வகை வருணமும் ஏற்றதாழ்வுகளோடு ஆண்டான் அடிமையாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற மனுநீதியைப் போற்றுவது. இப்படி நியாயப் பூர்வமான, தீர்ப்புகளால் தீயில் இட்ட புழுவாக அவர்கள் துடித்துப் போய் விடுவார்கள். பெண்களுக்கு ஆதரவான நியாயத்தை பெண்களைக் கொண்டே எதிர்க்கவே பார்ப்பனிய அரச குடும்பத்தின் இந்தப் பேரணி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,929.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



