17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று பதவிக் காலம் முடிவடைந்த உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, கடந்த மாதத்தில் மட்டும் நான்கு விவாதத்திற்குரிய தீர்ப்புகளை வழங்கிச் சென்றுள்ளார். அதில் இரண்டு தீர்ப்புகள் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாக, கட்டமைத்த மரபு தொடர்பானவைகள். ஒன்று கோயில், மற்றொன்று குடும்பம் தொடர்புடையன. தமிழர் கோயிலும், குடும்பமும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையுடையன. தமிழ் மன்னர்களின் அரண்மனைகள் தற்போது இல்லை ;தமிழ் மன்னர்கள் கட்டிய பல ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள் இன்றும் இருக்கின்றன. கோ 10 இல் அரசன் மக்களுக்காக கட்டிய பெரிய இல்லம் தான் கோயில். கோயில் தமிழர்களுக்கான பொது இடம். ஆரியர்கள் தொல்கதைகளைச் சொல்லி இந்தியா முழுவதும் கோயில்களைத் தங்களுக்குடையதாக ஆக்கிக் கொண்டு அங்கே பாகுபாட்டை திணித்து வருகிறார்கள். அந்த வகையாக சபரிமலையில் உள்ள ஐயனாருக்கு ஒரு தென்மக் கதை சொல்லி, ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவதை தடைபடுத்தினார்கள். பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது. ஆனால் பந்தள இளவரசனாக மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனிடம் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார். ஐயப்பன் என்பவர் ஐயனுக்கும் அப்பனுக்குமான குழந்தை அதாவது சிவனுக்கும் திருமாலுக்கும் ஆன குழந்தை. அவர் மகிசி என்கிற பெண்ணை அழிக்கப் பிறந்தவர். அவரை புறக்கணித்த வளர்ப்புத் தாய் யொரு பெண் அவர் பெண் தொடர்பில்லாமல் காட்டில் வாழ்ந்தார். எனவே அவர் ஆண்களுக்கான தெய்வமாக போற்றிக் கொள்ளப் பட்டார். இதுதான், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப் படாததற்கான காரணமாக தொடக்கத்தில் இருந்தது. தொடக்கத்தில் பெண்கள் அறவே, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப் படாத நிலைதான் இருந்தது. பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 10 அகவைக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 அகவை தாண்டிய பெண்களும் அனுமதிக்கப் படும் நிலை உருவாக்கப் பட்டது. 10 அகவை முதல் 50 அகவையுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சபரிமலைக்கு பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் அந்தத் தொன்மக் கதை பொருளற்று போய்விடும் என்பதால் அந்தத் தீர்ப்பை எதிர்க்க ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. கோயிலுக்குள் பெண்களுக்கு தடையில்லை என்கிற கோயிலுக்குள் பெண்களுக்கான நுழைவு அனுமதி சரிதான். ஆனால், அகநானூறு, குறுந்தொகை என்றெல்லாம் இல்லற வாழ்க்கைக்கு அகப்பொருள் இலக்கணம் வகுத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தை கட்டமைத்து பாதுகாத்து வரும் குடும்பத்திற்குள் அன்னியர் ஒருவரின் நுழைவு அனுமதிக்கு தீர்ப்பு அளித்து அகவாழ்க்கைக்கு களங்கம் கற்பிக்கப் பட்டுள்ளது மற்றொரு தீர்ப்பால். கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 497-இன் கீழ் 5 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை அறங்கூற்றுவர் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கள்ளக்காதல் குற்றமல்ல என்று கூறியதுடன் 497 சட்டபிரிவை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்புக்கு பெரியதாக தமிழக கட்சிகள் கூட எதிர்ப்பை இன்னும் பதிவு செய்யாதது வேடிக்கைதான். ஆரியம் இன்னும் வேகமாகவே இருக்கிறது. தமிழியல் இன்னும் தூக்கத்தில் தான் இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,929.
மகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழ்ந்த பிரம்மா, சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



