காஷ்மீர் சென்ற இராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்குள் அனுமதிக்கப் படவில்லை. டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் 07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெற்றிருந்த சிறப்புத்தகுதியை இந்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு ஒன்றியப் பகுதிகளாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய அரசு. கடந்த கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஜம்மு-காஷ்மீர் சென்றபோது சிறிநகரில் இருந்து திருப்பி விடப்பட்டனர். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல முடிவு செய்தனர். இராகுல்காந்தியுடன் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதன்படி, இராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறிநகர் விமான நிலையம் வருகை தந்தனர். ஆனால், விமான நிலையத்திலேயே எதிர்க்கட்சி தலைவர்களைத் தடுத்து நிறுத்திய இந்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள், மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,254.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.