Show all

மீண்டும் வேலைக்குத் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்! பெயருக்குச் சொந்த மாநிலங்கள். ஆனால் வாழ்வாதாரம் இல்லாத நாடோடி வாழ்க்கை

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்கள், வறுமை வாட்டுவதால், மீண்டும் வேலை பார்த்த மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொசுவை அடிக்க கோடாரியைத் தூக்கிய கதையாக, கொரோனா நுண்நச்சு பரவலை தடுப்பதற்காக, நாளது 12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5121 (25.03.2020) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, டில்லி, ஹரியானா, பஞ்சாப், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அன்றாடக் கூலிகளாக பணியாற்றி வந்த, வெளி மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

முதலாளிகள் கைவிரித்ததால், சொந்த மாநிலங்களை நோக்கி சாரை சாரையாக அணிவகுத்துச் சென்றனர். ஊரடங்கால் போக்குவரத்து முடக்கப்பட்டதால், பல நூறு கி.மீட்டர் நடை பயணமாகவே குழந்தைகள், உடைமைகளுடன் சென்றனர். இவ்வாறு சென்ற தொழிலாளர்கள் சிலர், தொடர்வண்டி மற்றும் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகினர்.

மக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோரின் போராட்டங்களை அடுத்து சிறப்பு தொடர்வண்டிகளை இயக்கி, தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தன அரசுகள். 

இந்நிலையில் குறிப்பாக, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ளதால், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் வேளாண்மை, கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆனால், இவற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டதால், வேலைக்கு ஆள் கிடைக்காமல் முதலாளிகள் தவிக்கின்றனர். ஏற்கனவே பணியாற்றிய தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு, முன்பை விட அதிக சம்பளம் தருவதாகவும், கணிசமான முன் பணம் தருவதாகவும் கூறி, அவர்களை மீண்டும் வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில், வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் பலரும் திண்டாடுகின்றனர், பணிகள் பாதியில் நிற்பதால், அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், கட்டுமான பணிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை.

பெயருக்குச் சொந்த மாநிலங்கள். ஆனால் வாழ்வாதாரம் இல்லாத நாடோடி வாழ்க்கை என்ற நிலையில்- சொந்த மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு, அங்கு வேலைவாய்ப்பு இல்லாமல், அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல், வறுமையில் வாடுவதாக வருத்தத்துடன் கூறுகின்றனர். 

இதையடுத்து, உத்தரப் பிதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து, தெலுங்கானா, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ஆகிய மாநிலங்களுக்கு, ஏராளமான தொழிலாளர்கள் மீண்டும் திரும்பத் தொடங்கி உள்ளனர். இதனால் சிறப்பு தொடர்வண்டிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இது குறித்து, கிழக்கு மத்திய தொடர்வண்டித்துறை மண்டல மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ராஜேஸ் குமார் கூறியதாவது: பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, செகந்திராபாத், பெங்களூரு, ஆமதாபாத், அமிர்தசரஸ், ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு தொடர்வண்டிகளில், ஏராளமான தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர். என்பதாக அவர் கூறினார்.

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த குசோ மண்டல் என்ற தொழிலாளர் கூறியதாவது: ஊரடங்கிற்கு முன், பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் பணியில் ஈடுபட்டு வந்தேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த மாநிலத்துக்கு வந்தேன். அரசு தரப்பில் தருவதாக கூறப்பட்டிருந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை, எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. இங்கு தொடர்ந்து தங்கியிருந்தால், பசியில் இறப்பதை தவிர வேறு வழியில்லை. இதனால், மீண்டும் பஞ்சாப் செல்ல முடிவு செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

ராஜிவ் சவுபால் என்ற தொழிலாளர் கூறியதாவது: பஞ்சாபில் ஏற்கனவே வேளாண் வேலை பார்த்த இடத்திலிருந்து, மீண்டும் அழைப்பு வந்துள்ளது. ஒரு ஏக்கரில் வேளாண் பணிகளை முடிப்பதற்கு, ஊரடங்கிற்கு முன், 3,500 ரூபாய் தந்தனர். தற்போது, 5,000 ரூபாய் தருவதாக முதலாளி உறுதி அளித்துள்ளார். மேலும், முன் பணமாக எங்கள் குடும்பத்திற்கு, 15,000 முதல் 20,000 ரூபாய் வரை தருவதாக தெரிவித்துள்ளார். அதனால், பஞ்சாபுக்கு செல்ல முடிவு செய்து உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

ஹந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வட இந்திய மக்களை யெல்லாம் இப்படி நாடோடி வாழ்க்கைக்கு அலைய விட்டு விட்டு, கொஞ்சம்கூட வெட்கமேயில்லாமல் நம்மிடம் ஹிந்தி திணிப்பை முன்னெடுக்கிற நடுவண் பாஜக அரசு மீது தமிழக மக்களுக்குத்தாம் கோபம் கோபமாக வருகிறது. இப்படி காலம் காலமாக நடோடி பிழைப்பில் இருந்து வரும் அந்த மக்கள் தங்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகளை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது வரலாற்றுச் சோகந்தான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.