Show all

வினாடிக்கு வினாடி சூடேறிக் கொண்டிருக்கும் சாத்தான்குள வழக்கு!

சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் காயங்கள் இருப்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை முதன்மைத்துவமான தகவலைத் தெரிவித்துள்ளது.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் காவல்துறையினரின் கைது காலத்தில் ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இன்று, அறங்கூற்றுவர்கள், பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோரின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் உடற்கூறு ஆய்வு நடைபெற்று அந்த அறிக்கை பதிகை செய்யப்பட்டிருந்தது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில், தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் உள்ளன. எனவே சாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. ஒரு நொடி கூட வீணாக கூடாது அறங்கூற்றுமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணையை தொடங்;கும்வரை, நெல்லை சரக காவல்துறை தலைவர் அல்லது நெல்லை சிறப்புக் காவல்படை பிரிவு உடனடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா என்பதை இன்று மதியம் 12 மணிக்குள் அறங்கூற்றுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அறங்கூற்றுவர்கள் அதிரடியாக தெரிவித்துள்ளார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.