மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இந்த ஆண்டே 50விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 விழுக்காட்டு இடஒதுக்கீட்டையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு தெரிவித்தது. 10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவ படிப்பில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்பில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக நலங்குத் துறை சார்பில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த அறங்கூற்றுமன்றம் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, முடிவெடுத்து அதன் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தரப்பில் இரண்டு மாதம் இருபத்தி இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச அறங்கூற்றுமன்றத்தின் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், அந்த கோரிக்கையை நிராகரித்து உள்ளதாம். முன்னதாக, இரண்டு மாதம் பனிரெண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், இந்திய மருத்துவக் கழகத்துக்கும் விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்ப உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருந்தது. மருத்துவ படிப்பில் அனைத்து இந்திய தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேல்படிப்பிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 விழுக்காட்டு இடஒதுக்கீட்டையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு தெரிவித்தது- கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை கையில வேப்பிலையோடு ஆடிச்சாம் என்கிற கதையாக இதையடுத்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) நடப்பு கல்வியாண்டில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.