கொரோனா குணமளிப்புக்கும், கொரோனா வரமல் தடுப்பதற்கும் உள்ள வேறுபாடு- அரசியல்வாதிகளுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடுப்பூசியை விரைவு படுத்த முயலமாட்டார்கள் 22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வல்லரசு நாடுகள் தொடங்கி வளரும் நாடுகள் வரை கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குவதில்தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 14 தடுப்பூசி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் நான்கு தடுப்பூசிகளின் ஆய்வுகள் இன்னும் சில மாதங்களில் மனிதர்களிடம் நடத்தப்படும் சிகிச்சை ஒத்திகைகள் (க்ளினிக்கல் ட்ரையல்) கட்டத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புனேயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அந்த ஆய்வு தற்போது மூன்றாம்கட்ட ‘சிகிச்சை ஒத்திகைகளை’ எட்டியுள்ளது. ஆய்வு நிறைவடைவதற்கு முன்னரே தடுப்பூசி தயாரிக்கும் பணிகளையும் தொடங்கிவிட்டது அந்த நிறுவனம். காரணம், ஆய்வு வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் தாமதமில்லாமல், பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பூசி விநியோகத்தைத் தொடங்க முடியும் என்பதால் அவ்வாறு செயல்படுகிறது. ஹைதரபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின், என்ற தடுப்பூசியை புனேவிலுள்ள தேசிய நுண்நச்;;;;;சு இயல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. முதற்கட்ட ஆராய்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், சிகிச்சை ஒத்திகைகள் நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கோவாக்ஸின் தடுப்பூசி மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்திய விடுதலை நாளன்று தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் சிகிச்சை ஒத்திகைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். அதில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் இந்த ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். சிகிச்சை ஒத்திகைகளில் ஈடுபடுத்தப்படும் நபர்களின் பதிவை நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குநர் பல்ராம் பார்கவா வியாழக்கிழமை கடிதம் ஒன்றை எழுதினார். அலுவலக அடிப்படையில் அனுப்பப்பட்ட இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவிவிட்டது. தடுப்பூசி கண்டறிவதில் இத்தனை அவசரம் காட்டுவது ஏன் என்ற கண்டனக் குரல்கள் எழுந்ததையடுத்து, சிகிச்சை ஒத்திகைகள் முடிவுகள் மட்டுமே விடுதலை நாளன்று வெளியாகும். இரண்டு படிநிலை ஆய்வு முடிவுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்குக் கூடுதல் நாட்கள் ஆகும். பரிசோதனைகள் வெற்றியடைந்தால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இது தொடர்பாகப் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், கோவிட்-19 நோய்க்கு விரைவில் தடுப்பூசி கண்டறிய வேண்டும் என்பது நியாந்தான். ஆனால் மருத்துவ நெறிமுறைகளுக்கு உட்பட்டு அதைக் கண்டறிய வேண்டும் என்பதும் கட்டாயம். கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சியில் சிகிச்சை ஒத்திகையின் மூன்றாம் நிலை மிகவும் முதன்மையானது. அதில் 20,000 முதல் 30,000 பேரை ஈடுபடுத்த வேண்டும். வேகமாக இந்த சிகிச்சை ஒத்திகையைச் செய்தால்கூட அது நிறைவடைய ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், கொரோனா நுண்நச்சைப் பொறுத்தவரையில் நோய் அரும்பும் காலம் இரண்டு முதல் 14 நாட்கள். சிலருக்கு 28 நாட்கள்வரை கூட ஆகலாம். தடுப்பூசியை சிகிச்சை ஒத்திகைக்காக ஒருவருக்குச் செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு அவரை நுண்நச்சுத் தொற்றுக்கு உட்படுத்தி, தொற்று உருவாகிறதா என்று கண்டறிய வேண்டும். அதன் பிறகு மீண்டும் 28 நாட்கள் காத்திருக்க வேண்டும். நாளை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோரின் பதிவு முடியும்பட்சத்தில் வெறும் 38 நாள்களுக்குள் மூன்று கட்டப் பரிசோதனைகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? அவசர அவசரமாகத் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நினைப்பது இயல்அறிவுக்குப் புறம்பானது, மனித குலத்துக்கு எதிரானது. இந்தப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயல்அறிவு பாடாகச் (அரசியல்பாடாக அல்ல) செயல்பட வேண்டும். கோவாக்ஸின் தடுப்பூசி சிகிச்சை ஒத்திகைக்கு தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் பல்வேறு ஐயப்பாடுகளைக் கிளப்புகிறது. எனவே, தடுப்பூசி ஆய்வுக்கு தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்தாமல், சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை போன்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். விடுதலை நாளில் கொரோனாவிற்கு தடுப்பூசி உருவாக்கி விட்டோம் என்று பீற்றிக் கொள்வதற்கான அரசியல் உள்நோக்கம் கொண்டதா? தலைமைஅமைச்சர் உரையில் தடுப்பூசி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதற்காக ஆய்வில் அவசரம் காட்டப்படுகிறதா? என்று கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவ நிபுணர்கள். தடுப்பூசி என்பது பதஞ்சலியின் கொரோனில் போன்ற குணமளிப்பு மருந்து அல்லவே அல்ல. குணமளிப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதும் பயன்படுத்தும் எளிது. கொரோனாவிற்கு என்று தனியாக ஒரு மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும் அறுபது விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனாவைக் குணப்படுத்திக் கொண்டுதாம் இருக்கிறோம். தடுப்பூசி அவ்வாறானது அன்று. தடுப்பூசி அந்தந்த நோய்களுக்கான நச்சிலிருந்து உருவாக்கப்படுவது. தடுப்பூசி எல்லா நோய்களுக்கும் உருவாக்கி விட முடியாது. இது தவிர, தடுப்பூசி செலுத்தியதால் வேறு சிக்கல்கள் உடலில் ஏற்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும். அதனால் தடுப்பூசி வழங்கிய பிறகு 14, 28, 104, 194 நாள்களில் அவர்களைக் கண்காணிப்பார்கள். முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால்தான் இரண்டாம் நிலை சிகிச்சை ஒத்திகை நடத்த முடியும். அதில் சுமார் 1,000 பேரை ஈடுபடுத்துவார்கள். அவர்களில் 500 பேருக்குத் தடுப்பூசி கொடுப்பார்கள், 500 பேருக்கு கொடுக்க மாட்டார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுகிறது என்று பார்ப்பார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 1,000 பேரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துவிட்டார்கள், நுண்நச்சு வெளிப்பாட்டுக்கு ஆளாகவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் யாருக்குமே நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றால் ஆய்வை நடத்த முடியாது. அதனால் இரண்டாம்நிலை ஆய்வைப் பொறுத்தவரை எப்போது முடியும் என்று வரையறுக்க முடியாது என்பதால் தோராயமாக ஒன்பது மாதங்கள் ஆய்வு செய்வார்கள். அப்படியென்றால் இரண்டு நிலை ஆய்வுகள் முடிய சுமார் 15 மாதங்கள் ஆகும். அப்படியிருக்கும்போது வெறும் 38 நாள்களில் முடிவை எப்படி வெளியிட முடியும்? சிகிச்சை ஒத்திகையின் இரண்டு நிலைகளையும் ஒரே நேரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசி கண்டறிவதன் முதல் கொள்கை என்பது- மக்களுக்குத் தடுப்பூசி உதவி செய்யாவிட்டாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சியில் மக்களுக்குத் தீங்கு விளைந்;து விடக் கூடாது. குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் நடுவே நடத்தப்படும் முதல் நிலை ஆய்வே நிறைவடையாமல், அதிக எண்ணிக்கை கொண்டவர்களின் நடுவில் ஆய்வு நடத்துவது மிகவும் ஆபத்தானது. இது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது என்றார் அவர். இந்தியாவில் நடைபெறும் தடுப்பூசி ஆய்வுகள் குறித்த உண்மை நிலை என்னவென்று நடுவண் அரசின் இயல்அறிவு கருத்துப்பரப்புதல் நிறுவனத்தில் பணியாற்றும் முதுநிலை இயல்அறிவர் த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கூறியதாவது:- ஹைதரபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக், அகமதாபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கடிலா ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் மனித சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இரண்டு வகையாக தடுப்பூசி ஆய்வு நடைபெறும். கொரோனா நுண்நச்சை ஆய்வகத்தில் வளர்த்து, உயிரிழக்க வைப்பார்கள். பார்மாலிடுஹைடு என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி நுண்நச்சை சிதையாமல் பாதுகாப்பார்கள். இந்த பார்மலிடு ஹைடில் இறந்த பொருட்கள் எதையும் அப்படியே சிதையாமல் நீண்ட காலம் வைத்திருக்க முடியும். அருங்காட்சியகங்களில் கண்ணாடி குடுவைகளில் மீன், பாம்பு போன்ற செத்த உயிரினங்களை இப்படித்தான் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். கொரோனா நுண்நச்சு பாகங்களை அப்படியே வைத்திருக்கும், செயலிழந்த அந்த நுண்நச்சை நமது உடலுக்குள் செலுத்தும்போது அதற்கு எதிரான எதிர்ப்புப் பொருளை நமது உடல் உருவாக்கும். ஒருமுறை எதிர்ப்புப் பொருள் நமது உடலில் உருவாகிவிட்டால், அது உடலின் செல்களில் குறிப்பிட்ட காலத்துக்கு நினைவாகப் பதிவாகிவிடும். கொரோனா நுண்நச்சு தாக்கும்போது நமது உடல், அதற்கான அதே எதிர்ப்புப்பொருளை உருவாக்கி நோய்த் தொற்றாமல் பாதுகாக்கும். இந்த இரண்டு வகையான தடுப்பூசிகள் ஆய்வுகள்தான் நடைபெற்று வருகின்றன. இரண்டுமே சிகிச்சை ஒத்திகைக்குச் செல்கின்றன. இரண்டு ஆய்வுகளின் பரிசோதனைகளும் நிறைவடைந்து ஒப்புதல் கிடைக்க 15 - 18 மாதங்கள் எடுக்கும். அதற்குப் பிறகு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால் உடனடியாக கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இந்திய மக்கள்தொகையில் 10 விழுக்காட்டிற்கு தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்றாலும் குறைந்தது 12 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். இரண்டு வகையான ஆய்வுகளுமே சிறந்தவைதான். சாதகமான முடிவுகளை எட்டும்பட்சத்தில் நோயின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



