டைம், பத்திரிகையின் 2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான டைம், சார்பில் சிறந்த மனிதருக்கான விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு போப் பிரான்சிசை சிறந்த மனிதராக டைம் ஆசிரியர் குழு தேர்வு செய்தது. அதேவேளையில் வாசகர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று சிறந்த மனிதருக்கான போட்டியில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்தார். அவர் மொத்தமாக 16 சதவீதம் வாக்குகளை, அதாவது 50 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார் இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியாளர்களை, டைம் பத்திரிகை அறிவித்துள்ளது. மொத்தம் 50 பிரபலங்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து மோடி, முகேஷ் அம்பானி, சுந்தர் பிச்சை ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களைத் தவிர, அமெரிக்க அதிபர் ஒபாமா, போப் பிரான்சிஸ், சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த், ஹிலாரி கிளிண்டன், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி, நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் இளம்பெண் மலாலா, ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர். சிறந்த மனிதர் விருதுக்கு வாசகர்கள் வாக்குகளை அளிக்குமாறு, டைம் பத்திரிகை கேட்டுக் கொண்டுள்ளது. வாசகர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க நபர் யார்? என்பது அடுத்த மாதம் அறிவிக்கப்படும். அதன் பிறகு 2015-ஆம் ஆண்டின் சிறந்த மனிதரை டைம் பத்திரிகையின் ஆசிரியர் குழு அறிவிக்க உள்ளது. இதுவரை மோடி, புதின், சுந்தர் பிச்சை ஆகிய மூவரும் 1.3 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், முகேஷ் அம்பானி 0.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பதாகவும் டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவை நவீனமயமாக்க அவர் முயலுவதாகவும் டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிந்துத்துவக் கொள்கை அடிப்படையிலான சில சர்ச்சைகளை மோடி எதிர்கொண்டு வருவதாகவும் அந்தப் பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.