Show all

உழவர்களின் கடனில் ஒரு காசும் தள்ளுபடி செய்யாமல் 4 ஆண்டுகாலம் ஆட்சியை நடத்தி முடித்த சாதனையாளர்தான் மோடி: ராகுல்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளும் பாஜக அரசில், தலைமை அமைச்சர் மோடி இதுவரை உழவர்களின் கடனை தள்ளுபடி செய்தாரா. எந்த உழவனின் பயிர்கடனிலும் ஒரு காசு கூட தலைமை அமைச்சர் மோடி தள்ளுபடி செய்யவில்லை. உழவர்களின் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் அது குறித்து திட்டவட்டமாக நடுவண் அரசு மறுத்துவிட்டது. ஒரு சொல் கூட தலைமை அமைச்சர் பேசவில்லை.

கடந்த தேர்தலின் போது பேசிய மோடி, நாட்டின் காவல்காரராக இருப்பேன் என்று தெரிவித்தார். ஆனால், யாருக்குக் காவல்காரராக இருப்பேன் என்று அவர் சொல்லவில்லை. ஒருவேளை அனில் அம்பானிக்கு காவல்காரராக இருக்கிறாரா.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் அரசு நிறுவனத்துக்கு அளித்த ஒப்பந்தத்தை, தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்த்தது மோடி அரசு. அரசு நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கி இருந்தால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

மோடியின் ஆட்சியில் 15 முதல் 20 தொழிலதிபர்கள் மட்டுமே பலன் பெற்றுவருகிறார்கள். ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிவிட்டோம் ஆனால், இதுவரை ஒருசொல் கூட மோடி பேசவில்லை.

மோடியின் ஆட்சியில் நிரவ்மோடி, மெகுல் சோக்ஸி, லலித் மோடி, அனில் அம்பானி ஆகியோர் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள் , உழவர்கள் குறித்தும், இளைஞர்கள் குறித்தும் எந்த விதமான கவலையும் மோடிக்கு இல்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும், அதற்காகத் தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்து அமையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஏழைகளுக்காகவும், சிறு, குறு வர்த்தகர்களுக்காகவும், உழவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும், உழைக்கும் அரசாக இருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி இராஜஸ்தானில் தேர்தல் கருத்துப் பரப்புதல் கூட்டத்தில் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,935.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.