Show all

இந்திரா, ராஜீவ் போன்று மோடி துணிச்சலானவர் இல்லை: சாம்னா

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  இந்தியத் தலைமை அமைச்சர் மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் சிலர் உதவுவதாகவும் 5 சமூக ஆர்வலர்களை புனே காவல்துறையினர் கடந்த கிழமை கைது செய்தனர்.

பி.வரவரா ராவ், சுதா பரத்வாத், கவுதம் நவ்லகா, அருண் பெரேரியா, வெரோன் கோன்சால்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பீமா கோரிகான் கலவரத்திலும் தொடர்பு இருப்பதாகவும் காவல்துறையினர் குற்றம் சாட்டினார்கள். கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் 5 பேரும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதன் பின்புலம், காரணம் என்ன என்பதைக் கேட்டு கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக சாம்னா நாளேட்டில் தெரிவித்திருப்பதாவது:

இந்தியத் தலைமை அமைச்சர் மோடியைக் கொல்வதற்காக திட்டமிட்டுள்ள மாவோயிஸ்ட்களுக்கு உதவுவதாகக் கூறி, சமூக ஆர்வலர்கள் பி.வரவரா ராவ், சுதா பரத்வாத், கவுதம் நவ்லகா, அருண் பெரேரியா, வெரோன் கோன்சால்வேஸ் ஆகியோரை புனே காவல்துறையினர் கைது செய்தது முட்டாள்தனமானது.

இதற்கு முன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தலைமை அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கும், அவரின் அரசும் மக்களால் தூக்கி எறியப்பட்டது. மாவோயிஸ்ட்களால் தூக்கி எறியப்படவில்லை.

இப்போதுகூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை, மோடி அரசு ஜனநாயக நெறிமுறைக்குத் திரும்ப இன்னும் கால அவகாசம் இருக்கிறது, மாறவும் முடியும். ஆதலால், புனே காவல்துறையினர் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துகளைக் கூறுவதை நடுவண் அரசு தடை செய்ய வேண்டும். சமூக ஆர்வலர்கள் 5 பேரைக் கைது செய்வதற்கு புனே காவல்துறையினர் கூறிய காரணம் முட்டாள் தனமானது.

இன்றைய சூழலில் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் பல்வேறு நோக்கங்களுக்காக காவல்துறையினரைப் பயன்படுத்தும் பழக்கம் என்பது புதிதானது அல்ல. ஆனால், வேகமாக, சிறப்பான முறையில் உண்மையில் வெளியே எழும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

மோடியைக் கொல்வதற்காக மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளார்கள், அதிலும், ராஜீவ் காந்தியைக் கொன்றது போன்று கொல்லத் திட்மிட்டுள்ளார்கள் என்று புனே காவல்துறையினர் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

முன்னாள் தலைமை அமைச்சர் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் துணிச்சல் மிக்க தலைவர்கள், அச்சத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். ஆனால், தலைமை அமைச்சர் மோடி அதுபோன்று ஒருபோதும் துணிச்சலாகவும், வீரதீரமாகவும் செயல்பட்டது இல்லை.

தலைமை அமைச்சர் மோடிக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு உலகத் தரமானது, அவரின் தலைக்கு மேல் ஒரு பறவைகூட பறக்கமுடியாது.

மாவோயிஸ்ட்கள் கைகளில் அதிகமான அரசியல் பலம் இருக்கிறது என்று பாஜகவின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், கம்யூனிஸ்ட்கள் மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும், மணிப்பூரிலும் ஆட்சியை எப்படி  பறிகொடுத்திருக்க முடியும்.

காவல்துறையினர் கைது செய்துள்ள பி.வரவரா ராவ், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் பெரேரியா, வெரோன் கோன்சால்வேஸ் ஆகியோர் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்கள், மனித உரிமைக்காகப் பல களங்களில் இறங்கிப் போராடுபவர்கள். இவர்களைக் கைது செய்ததில் ஏதோ சில இடங்களில் தவறு நடந்திருக்கிறது. புதிய நகைச்சுவையான காரணங்களை பாஜக அரசு சொல்வதற்கு முன் உண்மை வெளிப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.