மோடியின் விளக்கணைத்தேற்றல் அறிவிப்பைப் பாராட்டி இதன் பின்னால் சயின்ஸ் காரணங்கள் உள்ளதாகச் சிலாகிக்கிறார்கள் சிலர். 24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று தலைமைஅமைச்சர் மோடி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை நாடு முழுவதும் அணைத்து விட்டு 9 நிமிடங்கள் டார்ச், அகல்விளக்கு அல்லது செல்போன் ஒளியை ஒளிர விட சொன்னார். 9.09 மீண்டும் விளக்குகளைப் போடச்சொன்னார். அன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய் தாளில் மோடி தோன்றி பேசுகிறார் என்று காட்டி, உங்களுக்கு தெரியவில்லையா? உங்களுக்கு தெரியவில்லையா? கேட்டு நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய பாஜக கொண்டாடிகள்- இன்றைக்கும் மோடியின் இந்த அறிவிப்பைப் பாராட்டி இதன் பின்னால் சயின்ஸ் காரணங்கள் உள்ளதாகச் சிலாகிக்கிறார்கள். 9 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் என்று சிலரும், 9 நிமிடங்கள் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் பூவியின் வெப்பநிலை உயரும் அதனால் கொரோனா உயிரிழக்கும் என்று சிலரும், ஏப்ரல் 9-ம் நாளில் நிலவு ஒளியும் செல்பேசி ஒளியும் இணைவதால் ஏற்படும் கதிர்களால் கொரோனா உயிரிழக்கும் என்று சிலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இன்று இரவு ஒன்பது மணியும் வந்தது. மின் விளக்கு ஒட்டுமொத்தமாக மக்களால் அணைக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் 9.09க்கு மின் விளக்கை மீண்டும் ஏற்ற முடியவில்லை. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. கால்மணிநேரம் அரை மணிநேரம் கழித்தே மின்சாரம் மீண்டும் வந்தது. சென்னையில் பல இடங்களில் மீண்டும் 9.09க்கு மின் விளக்குகளைப் போட்ட போது அவைகள் கண்சிமிட்டின. நாம் சோதித்துப் பார்த்ததில் மும்முனை இணைப்பில் ஆர் முனையில் 106 வேல்ட் மின் அழுத்தமும் ஒய் முனையில் 115 வோல்ட் மின் அழுத்தமும் பி முனையில் 160 வேல்ட் மின்அழுத்தமும் என மின் இணைப்பில் அழுத்தக் குறைவு காரணமாக விளக்குகள் கண் சிமிட்டின என்று புரிந்து கொள்ள முடிந்தது. கொஞ்ச நேரம் கழித்து ஒரு பாஜக கொண்டாடி நண்பர் என்னைப் பேசியில் அழைத்து மோடி மின்விளக்கில் கண் சிமிட்டினார் பார்த்தீர்களா என்று கேட்டார். அன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய் தாளில் மோடியைக் காட்டிய அதே நபர்தான். சரி இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டேன் ஒன்றும் அறியாதவன் போல. மோடி கிருஷ்ணரின் 11வது அவதாரம் என்று ஒரு போடு போட்டார். நன்றி ஐயா என்றுகூறி பேசியை துண்டித்தேன்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.