Show all

நூலிழையில் தவறவிட்ட வெற்றி! பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மகா கூட்டணி நூலிழையில் தவறவிட்ட வெற்றியால் பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மகா கூட்டணி நூலிழையில் தவறவிட்ட வெற்றியால் பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறியவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை இடங்களையும் வாக்குகளையும் பெற்றிருக்கின்றன என்பதை முதலில் பார்க்கலாம்.

பா.ஜ.க - 74 இடங்கள், 82,01,298 வாக்குகள்
ஐக்கிய ஜனதா தளம் - 43 இடங்கள், 64,84,414 வாக்குகள்
ஹெச்.ஏ.எம் - 4 இடங்கள், 3,75,564 வாக்குகள்
வி.ஐ.பி - 4 இடங்கள், 6,39,342 வாக்குகள்
மொத்த இடங்கள் - 125; மொத்த வாக்குகள் - 1,57,00,618

பீகார் தேர்தலில் மகா கூட்டணியின் கீழ் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை இடங்களையும் வாக்குகளையும் பெற்றிருக்கின்றன என்பதைக் பார்க்கலாம்.

ராஷ்டிரிய ஜனதா தளம் - 75 இடங்கள், 96,63,584 வாக்குகள்
காங்கிரஸ் - 19 இடங்கள், 39,94,912 வாக்குகள்
சி.பி.ஐ (எம்.எல்) - 12 இடங்கள், 12,50,869 வாக்குகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 இடங்கள், 3,56,855 வாக்குகள்
இந்திய கம்யூனிஸ்ட் - 2 இடங்கள், 3,49,489 வாக்குகள்
மொத்த இடங்கள் - 110; மொத்த வாக்குகள் - 1,56,15,709

நடந்து முடிந்த பீகார் தேர்தலில், இளம் தலைவரான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வென்றிருக்கிறது. வாக்குவாரியாக பார்த்தாலும் 96 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ராஷ்டிரிய ஜனதா தளம். எனவே, தேஜஸ்வி-க்கு இது வெற்றிகரமான தோல்வியாக இருக்கிறது எனலாம்.

ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு அடுத்த இடத்திலிருக்கிறது பாஜக. அந்தக் கட்சியைப் பொறுத்தவரை இது அவர்களுக்கு நல்ல தேர்தலாகவே அமைந்திருக்கிறது. 

தொடர்ந்து மூன்று முறை பீகாரை ஆட்சி செய்த மாநிலக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைத்தான் பிடித்திருக்கிறது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. 

என்னதான் 125 இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் வென்றிருந்தாலும், மகா கூட்டணியைவிட 15 இடங்களை மட்டுமே அதிகமாகக் கைப்பற்றியிருக்கிறது. வாக்குகள் அடிப்படையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகா கூட்டணியைவிட 84,909 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறது.

பீகாரின் ஹில்சா தொகுதியில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளரைவிட 12 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர், கிருஷ்ணாமுராரி ஷரன். 

மேலும் ஹில்சா தொகுதியில் விதிமீறல் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். ஹராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் சக்தி சிங் யாதவ் 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று இரவு 10 மணிக்கு சொல்லப்பட்டது. வெற்றிச் சான்றிதழுக்காகக் காத்திருந்தார் சக்தி சிங். பின்னர், அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அதற்குப் பிறகு அஞ்சல் வாக்குகள் செல்லாததால் விலக்கப்பட்டதாகவும், அதனால் எங்கள் வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டதாகவும் திடீரென்று கூறி அதிர்ச்சி தந்தனர் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை மறுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கீச்சுப் பக்கத்தில் 119 இடங்களில் தங்கள் கூட்டணி வென்றிருக்கிறது என்று அந்த 119 தொகுதிக்கான வெற்றி வேட்பாளர்களின் பட்டியலையும் கீச்சுவில் பதிவிட்டிருக்கிறது அந்தக் கட்சி. மேலும், அந்தப் பதிவில், 119 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருப்பதாகத் தேர்தல் அதிகாரிகள் எங்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். பின்னர் நாங்கள் தோல்வியடைந்துவிட்டதாகச் சொல்லி வெற்றிச் சான்றிதழ்கள் எதுவும் வழங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்திலும் மகா கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாகவே காட்டப்பட்டது. இத்தகைய செயல்கள் மக்களாட்சி தத்துவத்தை நையாண்டித் தலைப்பாக்குகிற நடவடிக்கை என்று பதிவிட்டிருந்தனர்.

பீகார் பொதுமக்கள் நடுவே, தேஜஸ்வி யாதவ் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் தவறு செய்துவிட்டார். அதனால்தான் மகா கூட்டணி தோல்வியைத் தழுவியிருக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, பீகாரில் எங்களுக்கு அதிக இடம் வழங்கியிருந்தால், நாங்கள் மகா கூட்டணி வெற்றி எண்ணிக்கையில் அதிக பங்களிப்பைத் தந்திருப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பேசிய சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் தலைவர் தீபன்கர் பட்டாச்சார்யா, குறைந்தபட்சம் இடதுசாரிகளுக்கு 50 இடங்களும், காங்கிரசுக்கு 50 இடங்களும் ஒதுக்கியிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருந்தார். காங்கிரசுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதுதான் மகா கூட்டணியின் தோல்விக்கு காரணம் என்று பெரும்பான்மையாகப் பேசப்பட்டு வருகிறது. காங்கிரசுக்கு எழுபது இடங்கள் ஒதுக்கியதில் 19 இடங்களில் மட்டுமே வென்றிருப்பது இந்தப் பேச்சுக்கான காரணம் ஆகும்.

எதிர்காலத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலில், தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு திமுக அதிக இடங்களை ஒதுக்கி பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் முன்னெடுத்த தவறை ஸ்டாலின் முன்னெடுத்து விடக்கூடாது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்திய அளவில், பார்ப்பனர்களும், பார்ப்பனிய ஊடகங்களும், பார்ப்பனிய அதிகாரிகளும் காங்கிரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டு, பாஜகவிற்கு துணை புரிவதாலும், அதையும் தாண்டி வெல்வதற்கு காங்கிரஸ்; பெருந்தலைவர்களுக்கு ஆர்வமும் இல்லை என்பதாலும் இனி இந்தியாவில் காங்கிரஸ் மெல்ல மெல்ல அணைகிற விளக்கே என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.