10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாகிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும், 'இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்' என்றே குறிப்பிடுகின்றனர். ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை, 'இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்' என்று அழைக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்து, இந்திய விடுதலையில், இந்தியப் பிரிவினையின் போது, இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும், அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும், தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். தொடக்கத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்துப் போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங், இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது. ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க முடியும் ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட முடியாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாகிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், அந்தப் பகுதி மக்கள், எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாகிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும் இல்லை; இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவும் இல்லை. முந்தைய காசுமீர் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காசுமீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியைப் பாகிஸ்தானும், 10 விழுக்காடு பகுதியைச் சீனாவும் நிர்வகிக்கின்றன. மூன்று நாட்டு ஆட்சியாளர்களுக்குமே மண்ணை ஆளமுடியும் என்பதில் இருக்கிற நம்பிக்கை மக்களின் மனங்களை ஆளமுடியும் என்பதில் இல்லை. ஜம்மு - காஷ்மீரில் வாழும் மக்கள் அனைவருக்கும், மூன்று நாடுகள் மீதான விருப்பம், மனஇயல்பு அக்கரைப் பச்சையாக இருந்து கொண்டிருக்கிறது. நடுவண் அரசை ஆண்ட காங்கிரசுக்கும் சரி, ஆளுகின்ற பாஜகவிற்கும் சரி, சட்ட இராணுவ நிருவாகத்தின் மீது இருக்கிற நம்பிக்கை மக்கள் மீது இல்லவேயில்லை. ஜம்மு - காஷ்மீரில், மீண்டும் மீண்டும் ஆளுநர் ஆட்சிக்கே வழி வகுப்பார்கள். அந்த வகையாகவே தற்போது, மெஹபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்த ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது பாஜக. மெஹபூபா முப்தியால், ரம்ஜானுக்காக பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தியிருந்த ராணுவம், ஆளுநர் ஆட்சியில் மீண்டும் தாக்குதலை தொடங்;கியுள்ளது. இந்நிலையில், லஷ்கர் பயங்கரவாதிகள், வயீத் என்ற பெயரில், இயங்கலை இதழ் ஒன்றை தொடங்கியுள்ளனர். இதன் முதல் பதிப்பு நேற்று வெளியாகிஉள்ளது. இதில், கடந்த ஆண்டு லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், லஷ்கர் அமைப்பின் செய்தி தொடர்பாளர், கஜ்நவியின் பேட்டியும் வெளியாகியுள்ளது. அதில், கஜ்நவி கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ராணுவத்தின் பினாமியாக லஷ்கர் செயல்பட வில்லை. ஜம்மு - காஷ்மீர் மக்களின், உண்மையான பிரதிநிதியாக செயல்படுகிறது. இந்தியா - பாக்கிஸ்தான் பிரிவினையின் போது, நிறைவேற்றப்படாத திட்டத்துக்காக நடந்து வரும் போராட்டத்துக்கு, பாகிஸ்தான் நியாயமான ஆதரவை தருகிறது. கடந்த ஆண்டு போன்று, இந்த ஆண்டும், கடும் தாக்குதல்களை நாங்கள் நடத்துவோம். இதை, இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். இவ்வாறு அவரால் கூறப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,828.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



