Show all

உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 7 பேரும் என் முன் அணியமாக வேண்டும்: நீதிஅரசர் கர்ணன் அதிரடி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்ட 7 நீதிஅரசர்கள் தனது முன்னிலையில் அணியமாக வேண்டும் என்று நீதிஅரசர் கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

     தமிழகத்தைச் சேர்ந்த, சின்னச்சாமி சுவாமிநாதன் கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிஅரசராக உள்ளார். இவர், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிஅரசராக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிஅரசர்கள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்ததாக இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

     இந்த வழக்கில் அழைப்பாணை பெற்றும் அணியமாக முடியாது என்று கூறிவந்த கர்ணன், பிடிஆணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 31-ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிஅரசர் ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிஅரசர்கள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் அணியம் ஆனார். இந்த வழக்கில் நீதிஅரசர் கர்ணன் அவர்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிஅரசர்கள் உத்தரவிட்டனர்.

     இந்த நிலையில் நீதிஅரசர் கர்ணன், நேற்று கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் கையெழுத்திட்டு அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

     அதில் அவர்,

‘மார்ச் 31-ந்தேதியன்று, எனது மனநலம் எப்படி இருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் ஜே.எஸ். கேஹர் கேள்வி எழுப்பினார். அதை அவரது அமர்வில் இடம்பெற்றிருந்த 6 நீதிஅரசர்களும் வழிமொழிந்தனர். திறந்த நீதிமன்றத்தில் இவ்வாறு அவர்கள் கூறி என்னை அவமதித்தனர். எனவே அந்த 7 பேரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989-ன்படி குற்றவாளிகள்’

என குறிப்பிட்டுள்ளார்.

     இது தொடர்பாக நீதிஅரசர் கர்ணன், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்ட 7 நீதிஅரசர்கள் அமர்வு, என்னை வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் அவமதித்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989-ஐ மீறிவிட்டனர். இது தொடர்பாக நான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவர்களை பணித்துள்ளேன்;. வரும் 28-ந்தேதி காலை 11.30 மணிக்கு எனது ரோஸ்டேல் உறைவிட நீதிமன்றம் முன்பாக 7 நீதிஅரசர்களும் அணியம் ஆக வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்ட மீறலுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய தங்களது கருத்துகளை கூறுவார்கள்,”

என்றார்.

     உயர்ந்த இடத்தில் அமர்ந்து விட்டாலும் தொடருமா ஏற்றதாழ்வு?  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.