Show all

காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா! இராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அடிப்படையுள்ளதா

23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர மற்றும் களத்தில் பணியாற்ற கூடிய அளவுக்கான ஒரு தலைவர் தேவை என்ற கருத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தனர். இதனால் இடைக்கால தலைவர் பதவியை விட்டு விலகுவதாக சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொளி கலந்துரையாடல் மூலமாக இன்று நடைபெறுகிறது.

08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த இராகுல் காந்தி கடந்த பாராளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பதவி விலகினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் தனக்கு காங்கிரசில் ஒத்துழைப்பு இன்மையே என்பதை இராகுல்காந்தி உணர்ந்திருந்தார். இனியும் தனக்கு காங்கிரசில் ஒத்துழைப்பு இருக்காது என்பதாலேயே காங்கிரசின் தலைவர் பதவியை உதறினார் இராகுல்காந்தி.

இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்புக்கு வந்தார். அகவை முதிர்வு மற்றும் உடல்நல குறைவுகளால் அவதிப்படும் சோனியாகாந்தி வேறு வழியின்றிதான் இந்தப் பொறுப்பை நிர்வகிக்க வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர மற்றும் களத்தில் பணியாற்ற கூடிய அளவுக்கான ஒரு தலைவர் தேவை என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதனால் இடைக்கால தலைவர் பதவியை விட்டு விலகுவதாக சோனியாகாந்தி அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொளி கலந்துரையாடல் மூலமாக இன்று நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் செயற்குழுவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். 

முன்னாள் தலைமைஅமைச்சர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் இந்த கடிதத்தை கண்டித்துள்ளனர். கடிதம் எழுதியது என்பதை விட, அந்த கடிதத்தில் உள்ள அம்சங்கள் மிகவும் மோசமான வகையில் உள்ளன. சோனியாகாந்தி இந்தக் கட்சிக்காக எத்தனை தியாகங்களைச் செய்தார் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தக் கூட்டத்தில் இராகுல் காந்தி பேசியது, நேரடியாக மூத்த தலைவர்களைக் குற்றஞ்சாட்டும் வகையில் அமைந்ததாகக் கருதப்படுகிறது. அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில் காங்கிரசை விமர்சனம் செய்வது மாதிரி ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அரசியல் நிலைத்தன்மையை இழந்து காங்கிரஸ் போராடும் நிலையில் மற்றும் சோனியா காந்தி உடல் நல குறைவால் அவதிப்படும் நிலையில் இதுபோன்ற கடிதம் எழுதப்பட்டுள்ளது. யாருக்காக இது செய்யப்பட்டது? இந்த கடிதம் எனது தாயை மிகவும் மன வேதனை அடையச் செய்துள்ளது. இந்தக் கடிதம் போகூழ்வயமானது. கட்சியின் தலைமையை பலவீனப்படுத்துவது என்றும்- பாஜகவுடன் கை கோர்த்துக்கொண்டு இப்படி செய்து கட்சியை பலவீனப்படுத்த விரும்பியுள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி ஒரு பெரிய குண்டை வீசினார். 

இந்த நிலையில் இராகுல் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இராகுல்காந்தியின் இந்த பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாஜகவுடன் கைகோர்த்து விட்டதாக கூறியதை இராகுல் காந்தி நிரூபித்தால், நான் பதவி விலக தயார் என்று செயற்குழு கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசியுள்ளார். 

இதேபோல கபில்சிபல் கீச்சுப் பக்கத்தில், 30 ஆண்டு காலமாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு கருத்து கூட கூறியது கிடையாது, என்று தெரிவித்துள்ளார். 

இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில், கபில்சிபல், சசிதரூர், குலாம்நபி ஆசாத், பிரிதிவிராஜ் சவான் மற்றும் ஆனந்த் சர்மா போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அடங்குவர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கையாலாகத பல தலைவர்களுக்கு காங்கிரசில் இருப்பதை விட பாஜகவில் இணைவது பலம் என்ற எண்ணம் தோன்றியிருப்பதாக இராஜஸ்தான் போராட்டத்தில் காங்கிரசுக்கு கமுக்கத் தகவல் கிடைத்திருக்கிறது. திமுகவில் உதயநிதி ஸ்டாலினை மரியாதை இல்லாமல் கத்துக்குட்டியாகப் பார்ப்பதைப் போலவே காங்கிரசில் இராகுல் காந்தியை கத்துக்குட்டியாகப் பார்க்கின்றனர் காங்கிரசில் மூத்த தலைவர்கள். ஏன் இராகுல்; காந்தியை பப்பு என்றே பெயர் வைத்து அழைப்பது குறித்து காங்கிரசார் மகிழ்ச்சி அடைவதாகவே தெரிகிறது. 

எம்ஜியார் அவர்களின் ஆட்சி காங்கிரசால் கலைக்கப்பட்ட போது அதிமுகவில் இருந்த பெரிய பெரிய தலைவர்களே ஆடிப்போனார்கள். ஆனால் எம்ஜியார் அவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். அதற்குப்பின்னர் அவர் இறக்கும் வரை அவருக்கு தமிழகத்தை ஆளும் உரிமையைத் தமிழக மக்கள் தந்திருந்தார்கள்.

ஆனால் காங்கிரஸ்- பாஜகவில் வீழ்த்தப்பட்டதில் ஆடிப்போன காங்கிரசின் மூத்த தலைவர்கள்- ஆறு ஆண்டுகளாக இன்னும் ஆடிக்கொண்டேயிருக்கிறார்கள். உச்சபட்சமாக ஆட்டம் நிற்காமல் பாஜகவில் விழுந்து விடும் வாய்ப்பு பல தலைவர்களிடம் காணப்படுவதக இராகுல் சந்தேகிக்கிறார். இராகுல் காந்தி இனி காங்கிரசுக்கு உறுதியாக தலைமையேற்க வரவே மாட்டார். காங்கிரஸ்காரர்களால் அவர் நிறையவே அசிங்கப்பட்டிருக்கிறார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு நல்ல, துடிப்பான, மக்கள் விரும்பும் தலைமை அமைய வேண்டுமானால் அது அடுத்து பிரியங்காவாகவே இருக்க முடியும். பிரியங்காவிற்காகவது தள்ளடும் காங்கிரசின் மூத்த தலைகள் பாஜகவில் இணைந்தாவது வழிவிடுமேயானல் எம்ஜியார் அவர்களைப்போல பிரியங்கா நடுவண் ஆட்சியைத் தக்கவைக்க முடியும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.