தேசிய நெடுஞ்சாலைகளில்
வசூலிக்காமல் விடப்பட்ட சுங்கக்கட்டணம் ரூ. 1000கோடியை விரைவில் வழங்க வேண்டும் என்று
நெடுஞ்சாலைத்துறை அமைச்சரகம் நடுவண் அமைச்சரவையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கறுப்பு பணத்தை ஒழிக்க முடியும்
என்ற நம்பிக்கையில், பிரதமர் மோடி நவம்பர்
8ஆம் தேதியன்று இரவு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 500 மற்றும் 1000
ரூபாய் தாள்கள் நள்ளிரவு முதல் செல்லாது என்றும் வங்கிகளில் பழைய ரூபாய் தாள்களை கொடுத்து
மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார். மோடி அறிவித்த நாள் முதலே நாடு முழுவதும் சில்லறை
தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில்
கட்டணம் செலுத்த முடியாமல் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருந்தன. இதனால் ஏற்படும்
நேர விரயத்தை தடுக்கும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு
வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று நடுவண் அரசு உத்தரவிட்டது. இதனால் ஏற்படும்
இழப்பீட்டு தொகையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகரகத்திற்கு நடுவண் அரசு வழங்கும் என்றும்
உறுதியளித்தது. இந்த நிலையில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 2 வரை
சுங்கக்கட்டணம் வசூலிக்காமல் விட்டதில் ரூ. 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு சாலை பராமரிப்பாளர்கள் நடுவண் அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக
நடுவண் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்த இழப்பீட்டுத் தொகையை
வழங்குவது பற்றி நடுவண் அமைச்சரவைக்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிதின்
கட்கரி, உடனடியாக அந்தப் பணத்தை தங்களுக்கு அளிக்குமாறு சாலை பராமரிப்பாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளதாக தெரிவித்துள்ளர். சுங்கக்கட்டணம் வசூலிக்காத காரணத்தால் சாலை பராமரிப்பு,
பணியாளர்களுக்கு ஊதியம் போன்றவைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக
கடனாக பெற்ற தொகைக்கு வட்டி கட்டி வருவதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையரகம் கூறியுள்ளது.
தங்களுக்கான இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்று சுங்கக்கட்டணம் வசூலிப்பவர்கள் நெடுஞ்சாலைத்துறை
அமைச்சகத்திற்கு அனுப்பி வருவதாகவும் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



