ஒன்றிய ஆட்சியில் பாஜக பதவியேற்றதில் இருந்தே- ஒரேமொழி, ஒரேமதம், ஒரேஇனம், ஒரேகட்சி, ஒரேவரி, ஒரேஆதார், ஒரேகுடும்பஅட்டை இந்திய ஒன்றியத்தை ஒரேநாடு கவர்ச்சித் தலைப்பைச் சூட்டி களமாடி வருகிறது. 12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்ட முன்வரைவுகளைத் தொடர்ந்து- தற்போது இந்தியாவின் பனிரெண்டாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய என்று- ஓர் இனத்தினர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அவ்வாறாக அமைக்கப்பட்ட அந்த முன்னெடுப்பை- இந்த ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். இந்திய வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியை ஒன்றிய பாஜக அரசு இந்தத் தலைப்பில் முன்னெடுத்திருப்;பதைக் கமல்ஹாசன் கீச்சுப்பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த 12000 ஆண்டு கால இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய ஒன்றிய பாஜக அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தென்னிந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்டவர்களோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியக் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அண்மையில் நடாளுமன்றததில் எழுத்து மூலம் கூறும் போது, தற்காலத்திலிருந்து 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்தியக் கலாசாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். 16 பேர்களைக் கொண்ட அந்தக் குழுவில், குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களைப் படிக்கும் போதே தலை சுற்றுகிறது. அனைவரும் வரலாற்று மறைப்புக்கான வல்லாதிக்கர்கள். இதை அவர்களின் பெயர்கள், பதவிகள், பட்டங்களே உணர்த்தும். இந்தக் குழுவில்- உலகின் முதல் அணைக்கட்டை (கரிகாலன் கல்லணை) கொண்ட தமிழகம் முற்றாக இல்லை. மேலும், தென்னிந்தியர்கள் ஒருவரும் இடம் பெறவில்லை. இதேபோல் வடகிழக்கு மாநிலத்தவர்களோ அல்லது சிறுபான்மையினரோ, பெண்களோ இடம் பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அண்மையில் தனது கீச்சுவில் இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கீச்சுப் பக்கத்தில் ‘பழைமையும், பன்முகத்தன்மையும் இந்தியக் கலாச்சாரத்தின் அடிநாதம். 12000 ஆண்டுகாலப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி. தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இன்றி இந்திய வரலாறு கிடையாது" என்று கூறியுள்ளார்.
1.உலக பிராமணர் சங்கத் தலைவர். எம்.ஆர். சர்மா,
2.தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழக துணை வேந்தர். இரமேஷ் குமார் பாண்டே,
3.டெல்லி பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த. பல்ராம் சுக்லா,
4.தேசிய சமஸ்கிருத சமஸ்தானின் துணை வேந்தர் பி.என். சாஸ்திரி,
5.இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல்கள். கே.என்.தீக்ஷித், 6.ஆர்.எஸ். பிஷ்ட், 7.பி.ஆர்.மாணி,
8.ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர். சந்தோஷ் சுக்லா,
9.லால் பகதூர் சாஸ்திரி, டெல்லி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் தலைவர் பி.சி. சர்மா,
10.ஹைதராபாத் பல்கலைக்கழக மானுடவியல் துறையின் தலைவர் கே.கே. மிஸ்ரா,
11.கனடாவைச் சேர்ந்த. ஆசாத் கௌசிக்,
12.டெல்லி பல்கலைக்கழகத்தின் வேந்தர் முகுந்த்கம் ஷர்மா, 13.விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷனைச் சேர்ந்த மக்கன்லால்,
14.இந்தியப் புவியியல் சர்வேயின் முன்னாள் கூடுதல் இயக்குனர் ஜெனரல், ஜி.என். ஸ்ரீவத்ஸவா,
15.கலாசாரத் துறையின் பிரதிநிதி,
16.ஆர்க்கியாலஜிகல் சர்வேயின் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



