16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா 6வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முந்தைய அரசில் நிதின் பட்டேல் நிதி, நகர்ப்புற மேம்பாடு ஆகிய தலையாய துறைகளை கவனித்தார். இந்த முறை நிதித்துறை சவுரவ் பட்டேலுக்கு ஒதுக்கப்பட்டது. நகர்ப்புற மேம்பாட்டு துறையை முதல்வர் விஜய் ரூபானி தன்வசம் வைத்துக்கொண்டார். அதிருப்தியால் நிதின் பட்டேல் தனது துறைகளின் பொறுப்புகளை ஏற்கமல் இருந்தார். துறைகள் ஒதுக்கியதில் விஜய் ரூபானி தன்னை ஒதுக்கிவிட்டதாகவும், தனது அதிருப்தி குறித்தும் நிதின் பட்டேல் கட்சி மேலிடத்தில் தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியது. தனது துறைகள் மாற்றப்படாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் மேலிடத்தில் அவர் கூறியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்விவகாரத்தில் கட்சியின் தலைவர் அமித் ஷா தலையிட்டார். இதனையடுத்து நிதின் பட்டேல் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “காலை 7:30 மணியளவில் அமித் ஷா அவர்கள், எனக்கு அழைப்பு விடுத்தார், என்னுடைய கவுரவம் மதிக்கப்பட வேண்டும் என்றேன், அவர் எனக்கு சரியான பொறுப்பை கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்,” என்றார். கட்சியின் தலைமையுடனான மோதலில் நிதின் பட்டேல் வெற்றியடையும் விதமாக அவருக்கு இப்போது நிதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலையில் இவ்விவகாரம் தொடர்பாக கட்சி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இதனையடுத்து பேசிய முதல்வர் விஜய் ரூபானி, கட்சியின் தலைமையுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் நிதி துறையை நிதின் பட்டேலிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது, இதுதொடர்பான தகவல்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,653
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



