03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலணியாதிக்கத்தின் கீழ் உள்ள மக்களை, காலணியாதிக்கத்திற்கு அடிபணிந்து நடப்பதற்கு உகந்ததாக கட்டமைக்க சட்ட பாதுகாப்பு மிக்க, மிக மிக வலிமையான அரசாங்கம்1. அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான காரணங்களை மட்டுமே சட்ட விதிகளாக்குவதற்கான அறங்கூற்று மன்றம்2. நாயை நடுச்சலையில் சுடுவதற்கு கூட சட்ட அங்கிகாரத்தோடு சுடுவார்கள் என்று, கட்டபொம்மன் போன்ற இந்திய விடுதலைப் போராளிகள் தூக்கிலிடப் பட்டதை- தண்டிக்கப் பட்டதை, அங்கலாய்த்த இந்திய அரசியல்வாதிகள், தங்களிடம், வெள்ளையன் விட்டுச் சென்ற இந்தியாவை அதே சட்ட அமைப்புகளோடு பாதுகாத்து வருகிறார்கள். வலிமையான இந்தியா நல்லதுதான். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர் வெள்ளையனை விட மக்களுக்கு அன்னியமானவராக இருக்கின்றாரே! அவர் கைப்பாவையாக அரசு இயந்திரங்கள் இயங்குவதுதான் சிக்கல். கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் காங்கிரஸ் மனு பதிகை செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரியுள்ளது. அதையடுத்து அதிகாலை 1.45 மணிக்கு தொடங்கி, நடந்த வாதத்தைத் தொடர்ந்து, எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கூறியுள்ளது. கர்நாடகாவில் தனியாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று பெரிய கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று உச்ச அறங்கூற்றுமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் ரவிந்திர் மைதானி மற்றும் பதிவாளர்கள் நள்ளிரவில் உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவை அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். இன்று காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் பதிகை செய்யப்பட்ட மனுவில், எடியூரப்பாவை பதவி ஏற்கும்படி ஆளுநர் விடுத்துள்ள அழைப்புக்கு தடை கோரப்பட்டது. மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசம் விடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவை குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்த தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்தார். அதையடுத்து அதிகாலை 1.45க்கு இந்த வழக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அறங்கூற்றுவர்கள் ஏகே சிக்ரி, எஸ்ஏ பாப்டே, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அதையடுத்து ஆளுநரின் அதிகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணி வரை கிட்டத்தட்ட, 3 மணி நேரம் கடும் வாதம் நடந்தது. அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச அறங்கூற்றுமன்றம், எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது. இவ்வாறக வெள்ளையர் ஆட்சியிலும் காலணியரசிடம் அதிரடியாகவெல்லாம், நியாயம் கேட்கும் உரிமை இருக்கத்தான் செய்தது; ஆனால் நியாயம்தான் கிடைக்காது; நமது நியாயம் கேட்பதற்கான உரிமை ஏற்றுக்கொள்ளப் பட்டதே என்ற சட்ட அமைப்பை பெருமையாக கருத வேண்டியது காலணி மக்களின் கடமை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,790.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



