அனைத்துக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய பொது உரிமையியல் சட்டம் தொடர்பான கருத்துகளை அறிவதற்காக சட்ட ஆணையம் கேள்வித்தாள் தயாரித்துள்ளதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மூன்று முறை தலாக் கூறப்படுவதன் மூலம் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவது தொடர்பாக சர்ச்சை எழுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை மதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், பாலினப் பாகுபாடு என்ற கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மதத்தினருக்கும் பொருந்தக் கூடிய பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்காக கேள்வித்தாள் ஒன்றை சட்ட ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் வாலி ரஹ்மானி, ஜாமியத்-உலமா-ஏ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சட்ட ஆணையத்தின் இந்த முயற்சிக்கு உடன்படாமல் நாங்கள் புறக்கணிப்போம். இந்த விசயத்தில் எங்கள் சமூகம் மீது நடுவண் அரசு போர் தொடுத்துள்ளது. நாட்டில் பொது உரிமையியல் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது அனைத்து மக்களையும் ஒருவகைப்பட்டவர்கள் என்று சித்திரிக்கும். இந்த நிலையானது நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பல்வகைமைக்கு அச்சுறுத்தலாக அமையும். தலாக் விசயத்தில் நடுவண் அரசின் நிலைப்பாடு சரியானதல்ல. மற்ற சமூகங்களை விட, குறிப்பாக ஹிந்து சமூகத்தை விட முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்துகள் குறைவாகவே உள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் விவாகரத்து செய்துள்ளனர். இதுபோன்ற விசயங்களில் முஸ்லிம் மதத்தின் அனைத்துப் பிரிவுகளும் அவற்றைச் சேர்ந்த பெண்களும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எங்கள் அமைப்புகள் வியாழக்கிழமை முதல் கருத்துப் பரப்புதல் இயக்கத்தை நடத்த உள்ளோம். முதல்கட்டமாக லக்னௌவில் கருத்;துப் பரப்புதல் கூட்டம் நடைபெறுகிறது. முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தக் கூடிய சட்டங்களில் குறைகள் உள்ளன. அவை ஒவ்வொரு காலகட்டத்திலும் தீர்க்கப்பட்டு வந்துள்ளன. நாடு தற்போது எல்லைப் பகுதியிலும் மற்ற விவகாரங்களிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அழிவுகரமான அந்த கருதுகோள்களுக்கு யார் பொறுப்பு என்பதை அரசு கண்டறிவதோடு, அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். பொது உரிமையியல் சட்டம் போன்ற கருதுகோள்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அரசு இதைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். நமது நாடு வெளிப்படையான, மக்களாளுமை, மதச்சார்பற்ற நாடாகும். இங்கு பொது உரிமையியல் சட்டம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இதற்காக தற்போது நடைபெறும் முயற்சியை யூகமான மனநிலையுடன் அணுகாமல் திறந்த மனதுடன் அணுக வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும். -மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் பல்வேறு சமூகங்களும், இனக் குழுக்களும் தனிச் சட்டங்களால் நிர்வகிக்கப்படும் இந்தியா போன்றதொரு நாட்டில் பொது உரிமையியல் சட்டத்தை அமல்படுத்துவது மிகவும் கடினம். இது சாத்தியமே இல்லை. இந்த விவகாரத்தை மதவாத செயல்திட்டமாகவோ, ஹிந்து-முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்னையாகவோ யாரும் கருதக் கூடாது. இந்தியாவில் பல்வேறு சமூகங்கள் தொடர்புடைய சுமார் 200-300 தனிநபர் சட்டங்கள் இருக்கின்றன. -முன்னாள் மத்திய சட்டஅமைச்சர் வீரப்ப மொய்லி
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



