26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைபேசியில் அழைத்தால் அரசு சேவைகள் வீடு தேடி வரும் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு. நேற்று தொடங்கிய இந்தத் திட்டத்தில், ஒரே நாளில் 21,000 அழைப்புகளால் தொலைபேசி சேவையை நிலைதடுமாற வைத்தனர் டெல்லி மக்கள். குறைவான பணியாளர்களே இருந்ததால் மக்களின் அழைப்புக்குச் சரியான பதிலளிக்க முடியாமல் தடுமாறியுள்ளது டெல்லி அரசு. முதல் நாளில் 21,000 அழைப்புகளில் 1,200 அழைப்புகளுக்கு மட்டும் பதிலளித்திருக்கின்றனர். இதில், 369 அழைப்புகளுக்கு மட்டும் அதிகாரிகள் நேரில் வருவார்கள் என்று உறுதியளித்துள்ளனர். வீடு தேடி வரும் திட்டத்தின் கீழ், திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உட்பட 40 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய டெல்லி முதல்வர், உணவுப்பொருள்கள் மட்டும் வீடுதேடி வருவதைப் போலவே, இனி பேசியில் அழைத்தால், அரசாங்க சேவையே வீடு தேடி வரும் என்றார். ஆனால், திட்டம் தொடங்கிய முதல்நாளில் பெரிய அளவில் எந்தவிதமான சேவையும் சென்று சேரவில்லை. முதல் நாளில், விண்ணப்பித்த ஏழு பேரிடமிருந்து தேவையான விவரங்களை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கின்றனர் அரசு அதிகாரிகள். முதல் நாளில் ஏகப்பட்ட அழைப்புகளால், இரண்டாவது நாளில் மக்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அருமையான முயற்சி! ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நாற்பது சேவைகளையும் உடனே முயலாமல், ஒவ்வொரு சேவையாக முன்னெடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,907.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



