கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப் படும். அஞ்ச வேண்டாம் இது தமிழ் நாட்டில் இல்லை. பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆளும் ராஜஸ்தானில், 15 நாட்களில் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரத்தைத் துண்டிக்க மாவட்டத் துணை ஆட்சியர் உத்தரவிட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ளது கங்கிதலா கிராமம். இந்தக் கிராமத்தில் மாவட்ட துணை ஆட்சியர் கர்டார் சிங், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்ற தலைப்பிலான அடாவடி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அப்போது, கிராம மக்கள் வீடுகளில் உடனடியாக கழிப்பறை கட்ட மறுப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து 6 பேரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் ரூ.10 ஆயிரம் பிணையத்தொகை மற்றும் வீடுகளில் கழிப்பறை கட்டி 15 நாட்களின் பயன்படுத்த தொடங்குவேன் என்ற உறுதிமொழியை ஏற்று அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில், துணை ஆட்சியர் கர்தார் சிங், அதிரடியாக, 15 நாட்களுக்குள் கழிப்பறை கட்டி பயன்படுத்தாத கிராமவாசிகள் வீட்டு மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராமத்தில் 81விழுக்காட்டினர் தங்கள் வீட்டில் கழிப்பறை கட்ட வில்லை. இது தொடர்பாக ஆய்வு நடத்திய கிராம பஞ்சாயத்து, திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு அபராதம் விதித்தது. இதனால், கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிட்டேன். இதற்கு மேலும் கழிப்பறை கட்டாவிட்டால், குடும்ப அட்டை பொருட்கள் துண்டிக்கப்படவுள்ளது எனக்கூறினார். இந்த உத்தரவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையறிந்த உயர் அதிகாரிகள் தலையீட்டை தொடர்ந்து உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



