Show all

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: நடுவண் அரசு அறிவிப்பு

தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என நடுவண் அரசு அறிவித்துள்ளது.

     தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நடுவண் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் போராடி வருகின்றனர்.

     போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அரசியல் தலைவர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

     இன்று 29-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. இன்று மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.

     இந்நிலையில் விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என நடுவண் அரசு தெரிவித்து உள்ளது.

     விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் உள்ளதா? என பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

     இதற்கு நடுவண் நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமாரி கங்வார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ‘விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் நடுவண் அரசின் பரிசீலனையில் இல்லை. என்று தெரிவித்தார்.

     ஏழைகள் வீட்டில் அடுப்பு எரிய விட்டுக் கொடுக்கப் பட்ட எரிவாயு மானியம்

     சுவிசு வங்கியில் இருந்து மீட்கப் பட்ட இந்தியர்களின் பல ஆயிரம் கோடி கருப்புப் பணம்

     ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பால் அரசுக்கு கிடைத்த பணம்

     இப்படி பல வகைகளில் பொது மக்களிடம் இருந்து பணம் பிடுங்குவதைத் தவிர என்ன திட்டம் போட்டது நடுவண் அரசு?

     அந்தப் பணத்தையெல்லாம் ஏழை வேளாண் பெருமக்களின் கடன் தள்ளுபடிக்கு பயன் படுத்த யார்? எது? என்ன? ஏன் தடை?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.