27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேசபக்தி எந்த கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது, அரசியல் எதிரிகளை தேசவிரோதி என அழைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் நடுவண் அரசு தெரிவித்தது. ஆனால், இந்த தாக்குதலில் உண்மை இல்லை, ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயரைக் கூறி வாக்குக் கேட்பவர்கள் குற்றவாளிகள், உயிர்தியாகம் செய்த வீரர்களின் மரணத்தை அரசியலாக்கியதற்கு அவர்களே பொறுப்பு. அரசியல் ரீதியாக எந்த எதிர்க்கட்சிகளையும் தேச விரோதி என்று அழைப்பதும் முறையானது அல்ல. இது கருத்து சுதந்திரத்தை மீறிய செயலாகும். தேசபக்தி என்பது எந்த ஒரு கட்சிக்கும் ஏகபோக உரிமை இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்டதாக்குதல் குறித்து அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும், அது அவர்களின் கடமை. புல்வாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமை கோரி ஏராளமான அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். தாக்குதலின் வெற்றி குறித்து பதாகைகளும், சுவரொட்டிகளும் ஒட்டிக்கொண்டு, அந்த தாக்குதலில் கிடைத்த வெற்றியை தங்களுக்கு கிடைத்த வெற்றி போல் பேசுகிறார்கள். ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை. பல பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்கிறார்கள். டெல்லியில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி ராணுவ உடை அணிந்து பாஜகவுக்கு வாக்குக் கேட்டார். இதனால் அரசியல் லாபத்துக்காக இந்தத் தாக்குதலை நடுவண் அரசு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அடிப்படையில் நாம் நமது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க தவறிவிட்டோம் ஆனால், சிலரோ வீரர்களின் உடை அணிந்து கொண்டு அவர்களை வைத்து அரசியலுக்காக கருத்துப் பரப்புதல் செய்கிறார்கள் இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,088.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.