கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, மாநில அரசுகள் மாநிலப் பேரிடர் தடுப்பு நிதியிலிருந்து கரோனா தொற்றில் உயிரிழந்தால் ரூ.4லட்சம் இழப்பீடு வழங்கலாம் என்று சில மணி நேரங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம். தற்பொழுது எந்த இழப்பீடும் கிடையாது என்று மாற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா நுண்ணுயிரித் தொற்றால் உயிரிழந்தால் அல்லது மீட்புப் பணியில், சேவையில் ஈடுபட்டு கரோனா தொற்றில் உயிரிழந்தது நிரூபிக்கப்பட்டால் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று நடுவண் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படாது என்று தனது அறிக்கையில் மாற்றம் செய்து நடுவண் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் சிறப்பாக தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை 85 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், வணிக அரங்குகள் போன்றவற்றுக்கு விடுமுறை வழங்கி கர்நாடகா, மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, கரோனா நோய்த் தொற்றை உலக நலங்குத் துறை அமைப்பு பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் கரோனா வைரஸ் தொற்று நோயை, பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மாநிலப் பேரிடர் தடுப்பு நிதியிலிருந்து நிதியை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் உயிரிழந்தவர்கள் எனப்படும்போது, மீட்புப் பணியில் ஈடுபடுவோர், மருத்துவப் பணியில் ஈடுபடுவோர் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தாலும் அவர்களுக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அறிவித்தது. இந்நிலையில் தான் முன்பு வெளியிட்ட அறிக்கைக்கு மாற்றாக, மீண்டும் ஓர் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கரோனா நோய் தொற்று பாதிப்பால் யார் உயிரிழந்தாலும் எந்த இழப்பீடும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.