Show all

டிங், டிங், டிங். வாங்க- வாக்குகள் எண்ணலாம் வாங்க!

பதினேழாவது இந்திய மக்களவைத் தேர்தல், பல்வேறு அரிபரிகளோடும், குழப்பங்களோடும், குற்றச்சாட்டுகளோடும் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் எடுத்து கொண்ட அவகாசமும் முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட விருக்கின்றன.

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பதினேழாவது இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது (இன்று வியாழக்கிழமை காலை 8.00மணி) தொடங்கி விட்டது. வாக்குகள் எண்ணிக்கையோடு, ஒப்புகை சீட்டுகள் சமமான எண்ணிக்கையில் இருக்கிறதா என்றும் எண்ணப் போகிறோம்.

இதோ இந்தியா முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணிக்கையை நடத்தும் தேர்தல் அதிகாரியும், துணை அதிகாரியும் வாக்களிப்பின் கமுக்கத்தைக் காப்பது பற்றியதான உறுதிமொழியை உரக்கப் படித்து உறுதிமொழி எடுத்துகொண்டிருக்கிறார்கள்.

அடுத்து வாக்குகளை எண்ண தொடங்குவதற்கு முன்னால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை நடத்தும் தேர்தல் அதிகாரிகளின் முன்னால் இது நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையத்தில் தங்களின் எண்ணிக்கை முகவர்களோடு போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்கள் இருக்க அனுமதியுண்டு. வாக்குகள் எண்ணப்படுவதை இந்த முகவர்கள் மேற்பார்வையிடுவர்.

அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணப்படுவது வழக்கம். ஆனால், அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும்போதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் இப்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை அந்த நிலையத்தின் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெறும்.

முதலில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற தமிழர்தம் பழமொழிக்கு ஒப்ப-
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பரவலாக ஐந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் ஒப்புகை சிட்டு எண்ணிக்கையும், வாக்கு இயந்திர வாக்குகளின் எண்ணிக்கையோடு பொருத்திப் பார்க்கப்படும்.

ஒப்பீடு சரியாக இருந்தால், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுவிடும்.

எந்த புகாரும் இல்லாமல் எண்ணிக்கை நிறைவடைந்தால் அல்லது தேர்தல் ஆணையத்தின் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தால் வாக்கு எண்ணிக்கை நிலைய அதிகாரி வாக்குகள் அனைத்தையும் எண்ணியவுடன் முடிவை அறிவிப்பார். இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்படும்.

காத்திருங்கள்! இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய யார் இந்தியாவின் தலைமை அமைச்சராக வரவேண்டும் என்பதை, இந்திய வாழ்மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக தெரிவித்திருக்கிறோமா? நாமும் குழம்பி இந்திய ஆட்சியையும் குழப்பத்தில் விட்டிருக்கிறோமா என்று பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,161.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.