பிரதமர் நரேந்திர
மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி
குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்,
சட்டப் பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்த
நிலையில் 4-வது கட்ட தேர்தல் வருகின்ற வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்,
உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அனல் பறக்கும் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டு
வருகின்றனர். அண்மையில் பிரதமர் மோடி ரம்ஜான், தீபாவளி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை
கிளப்பியுள்ளது. வாக்காளர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் மோடி பேசியுள்ளதாக
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதே போல் பந்தல்கண்ட் பகுதியில் நடைபெற்ற கருத்துப்பரப்புதலில்;
மோடி பேசுகையில், மாயாவதியை குறித்து தாக்கி பேசினார். இதற்குப் பதிலடியாக பிரதமர்
மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவி மாயாவதியும்
சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். சுல்தான்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாயாவதி,
பிரதமர் மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர். பகுஜன் சமாஜ் கட்சி தொடக்கத்தில்
ஒரு இயக்கமாகத்தான் இருந்தது. பின்னர் தான் அது அரசியல் கட்சியாக உருவெடுத்தது. பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எனது வாழ்வை
அர்ப்பணித்துள்ளேன். திருமணமே செய்து கொள்ளாமல் சிறுபான்மையினர் நலனுக்காக குறிப்பாக
முஸ்லீம்கள் நலனுக்காக நான் உழைத்து வருகிறேன். சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்கள் தங்களது
மிகப்பெரிய சொத்தாக என்னைக் கருதுகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியை பேகன்ஜி சமாஜ் கட்சி
என்று கூறிய பிரதமர் மோடியை உத்தர பிரதேச மக்கள் இந்தத் தேர்தலில் பழிக்குப்பழி வாங்குவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



