Show all

உழவர்கள் பேரணியால் திக்குமுக்காடும் டெல்லி! காவல்துறையினர் தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் தடை

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச உழவர்கள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இன்று இந்த பேரணி உத்தர பிரதேசம் -டெல்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான உழவர்கள், தங்களின் வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்ற சில கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி மேற்கொண்டனர். 

இந்த பேரணி உத்தரப்பிரதேசம், ஹரித்வாரில் உள்ள திக்கிட் காட் பகுதியில் தொடங்கியது. டெல்லி நோக்கி வந்த பேரணியில் வரும் வழியில் பல்வேறு கிராமத்தை சேர்ந்த உழவர்கள் கலந்து கொண்டு வந்ததால் மாபெரும் பேரணியாக மாறியது. 

இந்தப் பேரணி டெல்லியின் எல்லையான காசியாபாத்தை அடைந்தது. பேரணியை டெல்லியில் நுழையவிடாமல் தடுக்க காவல்துறையினர் பேரணி வரும் டெல்லியின் நெடுஞ்சாலையில் தடுப்புகளை வைத்து தடுக்க முற்பட்டனர். 

அதை மீறி உழவர்கள் வர முயல அந்த இடம் போர்களம் போல் காணப்பட்டது. உழவர்களை விரட்ட காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைக்க முயன்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.