இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 விழுக்காட்டினர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, நடுவண் நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட இதுவரை 5914 பேர்கள் குணமடைந்துள்ளனர். இந்த 5914 பேர்களில் 80 விழுக்காட்டினர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, நடுவண் நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையான 26 ஆயிரத்து 917ல் இது 22 விழுக்காடாகும். தமிழகத்தில் குணமளிப்;பின் விழுக்காடு 54 ஆகும். இன்னும் கேரளம், அரியானா, உத்தரகண்டம், இமாச்சல பிரதேசம், சட்டிஸ்கார், அஸ்ஸாம், லடாக், பாண்டிச்சேரி, கோவா, மணிபூர், திரிபுரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களும் நல்ல குணமளிப்பைக் கொடுத்திருக்கின்றன. ஆனாலும்- கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை 03,வைகாசி வரை (மே16) நீட்டிக்க வேண்டுமென டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் தங்கள் தரப்பு கோரிக்கையை நடுவண் அரசிடம் முன்வைத்துள்ளன. அதேநேரம், ஊரடங்கை 24,சித்திரை வரை (மே7) நீட்டித்து தெலங்கானா மாநிலம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில், அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மும்பை மற்றும் புனேவில் மட்டும், ஊரடங்கை நீட்டிக்கலாமா என மாநில அரசு ஆலோசித்து வருகிறது. குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள், நடுவண் அரசு எடுக்கும் முடிவை பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளன. தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி மும்மாநிலங்கள் சொந்த நிவாரணத்தில், மக்கள் விலை கொடுப்பில் ஊரடங்கை நீட்டித்து, நொந்து கொள்ள விரும்பவில்லை. 21,சித்திரை (மே4) கத்திரி வெயில் தொடங்கும் நாளில் விடியலைத் தொடங்கிட அணியமாக இருப்பதாகத் தெரிகிறது. நடுவண் அரசின் நெருக்கடியை பொறுத்து அது மாறலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



