கோவிசீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான இருதடவை இடைவெளி, 12 முதல் 16 கிழமைகளாக கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. அதுவே தொடரும் என்று தெரிவிக்கிறது, இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அமைப்பு. 30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு தடுப்பூசி மருந்தின் இரு, தடவைகளுக்கான கால இடைவெளியில் தற்போது எந்த மாற்றமும் செய்யவில்லை என்று இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ஒன்றிய அரசின் கொள்கைகளை முறைப்படுத்துவதற்கான அமைப்பாக ஒன்றிய அரசில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு முன்னெடுக்கப்பட்ட அமைப்பாகும். கோவிசீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தின் இரு தடவைகளுக்கான இடைவெளி, ஆறுமுதல் எட்டு கிழமைகளாக இருந்தது. இதன்படி முதல் தடைவ தடுப்பூசி செலுத்தியவர்கள், இரண்டாவது தடவை தடுப்பூசியை, இரு மாதங்களுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த இடைவெளி, 12 முதல் 16 கிழமைகளாக கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கிடையே பிரிட்டனில், இரு தடவை கோவிசீல்டு தடுப்பூசி மருந்திற்கான இடைவெளி, 12 கிழமைகளில் இருந்து, 6 முதல் 8 கிழமைகளாகக் குறைக்கப்பட்டது. அதனால் இந்தியாவிலும், கோவிசீல்டு தடுப்பூசி மருந்தின் இரு தடவைகளுக்கான கால அளவு குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து, இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அமைப்பின் நலங்குத் துறை உறுப்பினர் வி.கே.பால் கூறியதாவது: இந்தியாவில் கோவிசீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முதல் தடவை தடுப்பூசி போட்டவர்கள், 12 முதல் 16 கிழமைகளில் இரண்டாவது தடவை செலுத்திக் கொள்ளலாம். பிரிட்டன் அரசு, பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின், இரு தடவை தடுப்பூசிக்கான இடைவெளியை, 12லிருந்து ஆறு கிழமைகளாகக் குறைத்து உள்ளது. இந்தியாவின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கால இடைவெளியில் மாற்றம் செய்வது தொடர்பாக, நோய்த்தடுப்பு தொடர்பான இந்தியாவின் ஒன்றியத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கை கிடைத்த பின், தடுப்பூசிக்கான இடைவெளியில் மாற்றம் உண்டா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதுவரை, தற்போதுள்ள முறையே தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.