16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப அட்டைப் பொருள்கள் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: நடுவண் அரசு. இது ஒரு கதை! இனி தொடர்ச்சியாக மூன்று மாதம் குடும்ப அட்டைப் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது நடுவண் அரசு. இது ஒரு உத்தரவு! மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் குடும்ப அட்டைப் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக குடும்ப அட்டைப் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதனால், மானிய விலையில் கிடைக்கும் பொருள்களை வாங்க அவசியமில்லாதவர்களை எளிதில் அடையாளம் காணலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் பட்டினிச் சாவு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். குடும்ப அட்டைப் பொருள்களை வீட்டில் கொண்டு வந்து கொடுக்கிற கதைக்கும், குடும்ப அட்டை ரத்து செய்யப் படவேண்டும் என்கிற கதைக்கும் என்ன சம்பந்தம்? இப்படி குழப்பினால் அது தான் நடுவண் அரசா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,834.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



