30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1,484 கோடி: நான்கு ஆண்டுகளில் 84 நாடுகளுக்குப் பயணம். முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமானம் பதினைந்து கோடி. இருபது கோடி ரூபாய் விலையுள்ள கார் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கிறது. முப்பத்து ஐந்து இலட்சம் விலையுள்ள பைக் இந்தியாவில் புழக்த்தில் இருக்கிறது. இது போன்று இந்தியா விடுதலை பெற்ற பிறகான சாதனைகள் என்று ஏராளமானவற்றை பட்டியல் இட்டுக் கொண்டே செல்வார்கள். அதுசரி, நடைபாதையில் வசிக்கும் மக்கள் இருக்கின்றார்களா என்றால் இருக்கின்றார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் இருக்கின்றார்களா என்றால் இருக்கின்றார்கள். வேலை கிடைக்காத மக்கள் இருக்கின்றார்களா என்றால் இருக்கின்றார்கள் தொழில் அமையாத மக்கள் இருக்கின்றார்களா என்றால் இருக்கின்றார்கள் விரும்பிய கல்வி கிடைக்காத மக்கள் இருக்கின்றார்களா என்றால் இருக்கின்றார்கள். சொந்தமாக வீடு இல்லாத மக்கள் இருக்கின்றார்களா என்றால் இருக்கின்றார்கள். வங்கிக் கடனா அப்படியொன்று இருக்கின்றதா என்று கேட்கின்றவர்கள் இருக்கின்றார்களா என்றால் இருக்கின்றார்கள். அது ஏன்? இவர்களுக்கு எல்லாம் எப்போது விடுதலையின் பயன் பகிர்ந்தளிக்கப் படும்? கேள்விகள் எழுபத்தி யோரு ஆண்டுகளாகவும் தொடர்கிறது. வந்தது எழுபத்தி இரண்டாவது விடுதலை நாள் விழா ; விடுதலை! இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி நாடானதை குறிக்கும் நாளாகும். இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியத் தலைமை அமைச்சர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது விடுதலைப் போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் தலைமை அமைச்சர். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர். இப்படி கொண்டாடுவதுதான், விடுதலை நாள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



