24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பானது. அந்த நிகழ்சியில் நிதின் கட்கரி கூறியதாவது: கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்று இருக்க வேண்டியதில்லை. ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம் என தெரிவித்தார். நிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்தக் காணொளி இணையத்தில் தீயாகப் பரவியது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் அந்தக் காணொளியை மாய்ந்து மாய்ந்து பகிர்ந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நிதின் கட்கரி பேசிய அந்த காணொளியைத் தனது கீச்சுப் பக்கத்தில் பகிர்ந்து: நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே என குறிப்பிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,936.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.