16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பெங்களூரு நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமான முறையில் இல்லாமல் இந்த முறை, மாநிலத்தின் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தனித் தனியாக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அதில் பெங்களூரு குறித்த தேர்தல் அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சாலை, பாலம் உள்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள், ஒரு லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூங்காக்கள் நகரம் என்ற பெயர் பெற்ற பெங்களூருவில் உள்ள பூங்காக்கள் மேம்படுத்தப்படும். மேலும், ஏரிகள், குளங்கள் போன்றவை புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். நகரம் முழுவதும் சூரியஒளி மின்வசதி செய்யப்படும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வசதி செய்யப்படும். மொத்தத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படுகிறதோ இல்லையோ, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தான் பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் யோசனையை முன்னெடுக்கும். பாஜக வெற்றி பெறுமானால், பாஜகவும் கர்நாடகாவிற்கு ஆதரவாகச் செயல்படும்; காங்கிரசும் கர்நாடகாவிற்கு ஆதரவாகச் செயல்படும். நம்முடைய வேண்டுகோள் கர்நாடகாவில் எந்தக் காரணம் கொண்டும் பாஜக வெற்றி பெற்று விடக் கூடாது என்பதே! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,772.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



