Show all

எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டது பா.ஜ.க. அரசு: போராட்டத்தில் மம்தா பேச்சு

நடுவண் பா.ஜ.க. அரசு எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டதாக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசினார். நடுவண் அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- தேர்தலுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. ரூபாய் நோட்டு நடவடிக்கையால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை நடுவண் அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறேன். பெரும்பாலான தொழிற்சாலைகளில் கூலித் தொகையைப் பெற முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் நிலையான விகிதத்தில் முன்னேறும்போது, அரசு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பா.ஜ.க.வுக்கு யாரும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். சொந்தக் கட்சியினர் கூட அவர்களை கைவிட்டுவிடுவார்கள் என சவால் விடுகிறேன். இந்த அரசாங்கம் எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டது. நற்சான்றுகளை இழந்துவிட்டதால், அனைத்தையும் இழந்துவிட்டது. அரசு கொண்டுவந்துள்ள இந்தத் திட்டம் நிலப்பிரபுத்துவ முறையாகும். இதனால், ஏழைகளின் வருவாய் பறிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.