நான் அண்ணல் காந்தியின் புகைப்படத்தைக் கையில் வைத்திருப்பதாலும் ஊடகங்களிடம் பேசுவதாலும் இன்று கைது செய்யப்பட்டுள்ளேன். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இங்கு அனைவரும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காவலர்கள்தான் அசாதாரண சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்: வரலாற்றாசிரியர் ராமச்சந்திரகுகாவின் வருத்தம். 04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு, நாடு முழுவதும் கடந்த ஒரு கிழமையாக- அரசியல் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியானதையடுத்து அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி கலபுர்கி பகுதியில் கறுப்புக் கொடியுடன் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த மத்திய பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்வலர் யோகேந்திர யாதவ் மற்றும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நான் அண்ணல் காந்தியின் புகைப்படத்தைக் கையில் வைத்திருப்பதாலும் ஊடகங்களிடம் பேசுவதாலும் இன்று கைது செய்யப்பட்டுள்ளேன். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இங்கு அனைவரும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காவலர்கள்தான் அசாதாரண சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். காவலர்களுக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வருகிறது. மக்களின் போராட்டத்தைக் கண்டு டெல்லியில் உள்ள தலைவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்துக்கு அனுமதி வழங்க, இந்திய உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு துணிச்சல் இல்லை. எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும், நாங்கள் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை” எனப் பேசியுள்ளார். பெங்களூரின் பல்வேறு இடங்களில் நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மண்டபங்கள், டவுன் ஹால் போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஒரு கிழமையாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நடக்கும் போராட்டங்களால் நாட்டின் பல பகுதிகளில் திடீர் கலவரங்கள் வெடிக்கின்றன. பேருந்து, தொடர்வண்டிகளுக்குத் தீ வைக்கும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. டெல்லி, பெங்களூரு, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் போன்ற இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை ஜாமியா நகர், செங்கோட்டை, லாகூர் கேட், காஷ்மீரி கேட், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள மந்தி ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் 14 மெட்ரோ தொடர்வண்டி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கோட்டைப் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சவர்கலால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்துவதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அவர்களை வெளியேற்றும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிக்காகப் பல ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையம், தகவல் தொடர்புச் சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,371.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



