Show all

பாஜகவின் பித்தலாட்ட அரசியல் குஜராத் மேலவைத் தேர்தலில் அம்பலம்

குஜராத் மேலவைத் தேர்தலில் பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது வெற்றி வாய்மைக்கு கிடைத்த வெற்றி என்று கீச்சியுள்ளார்.

குஜராத்தில் மேலவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்தது பாஜக. இதனால் பெங்களூர் சொகுசு விடுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேரை அக்கட்சி தங்க வைத்து பாதுகாத்தது.

வாக்குபதிவுக்கு முதல்நாள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், வாக்குப் பதிவு நடைபெற்ற போது 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தனர். இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது.

எனவே, குஜராத் மேலவைத் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், பாஜகவுக்கு தான் வாக்களித்தோம் என இரு சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக பேட்டியளித்தனர். அவர்களது வாக்குகள் செல்லாது என அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது.

இந்த விசயத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தது. எனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்தனர். இதற்கு நடுவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில், இப்பிரச்சினை குறித்து அவசரமாக ஆலோசித்து வந்தனர்.

இதன்பிறகு, காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்திற்கு சென்று 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளும் செல்லாது என அறிவிக்க கோரியது. ஆனால் அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் சந்தித்து 2 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்க நெருக்குதல் தந்தனர்.

இதனால் தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். நள்ளிரவு வரை ஆலோசனை தொடர்ந்தது. இரவு 11.30 மணியளவில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்தது.

கட்சி மாறி வாக்களித்து, அதை வெளியே சொன்ன இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதைக் காரணமாக கூறி அந்த வாக்குகளைச் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து அகமது படேலின் தலை தப்பியது. மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவின் அரசியல் பித்தலாட்டங்களுக்கு எதிராக கிடைத்த வெற்றி இது. குஜராத்தில் பாஜக அரசின் பலத்தை எதிர்த்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம் என்று கீச்சுவில் பதிவிட்டுள்ளார் அகமது படேல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.