16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இடுக்கி அணை குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரியதாகும். உயரமான அணையும் ஆகும். கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை திறக்கப்பட உள்ளது. தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 2,394.72 அடியை எட்டியது. நீர் மட்டம் 2,395 அடியை எட்டும்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர் மட்டம் 2,397 அடியை எட்டும் பட்சத்தில் பரிசோதனை முறையில் ஓரிரு மணி நேரங்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விடும் வாய்ப்புகள் அதிகம் என்று கேரள மின்வாரிய அதிகாரிகள் கூறினர். மேலும் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தவிர்க்க ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை தயார் நிலையில் இருக்கும்படி உசார் படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை ஏற்கனவே எர்ணாகுளம், திருச்சூர் நகரங்களுக்கு வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னொரு குழு இடுக்கி செல்லும் என்றும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இடுக்கி அணையைத் திறப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அணையை திறக்கும் போது செருதோனி ஆற்றில் வெள்ளம் பாயும் என்பதால் தரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது குறித்தும் அதற்கான ஏற்பாடுகளைச் விரைவாக செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம் மூலம் விவாதிக்கப்பட்டது. அணை உள்ளபகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றியுள்ள பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். செயற்கைக்கோள் உதவியுடன் கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களில் இடுக்கி அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேரள அரசும், இடுக்கி மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,866.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



