Show all

அதிகாரப் பரவலாக்கத்தை கொரோனா மூலம் உருத்து வந்து ஊட்டுகிறது அறம்! அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பதில் அயராது போராடுகிறது பாஜக: வங்கிகள்இணைப்பு

ஒருபக்கம் சமூக இடைவெளி பேணலை வலியுறுத்தி ஊரடங்கு அமல்படுத்திவிட்டு, மறு பக்கம் தங்கள் கட்சி கொள்கையான தங்களை மையப்படுத்தி அதிகாரக் குவிப்பை நடைமுறைப் படுத்தும் வகைக்கான, 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கும் வேலையை இன்று முன்னெடுக்கிறது நடுவண் பாஜக அரசு.

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தங்கள் கட்சி கொள்கையான, தங்களை மையப்படுத்தி அதிகாரக் குவிப்பை நடைமுறைப் படுத்தும் வகைக்காக ஒரே நாடு என்ற தலைப்பில் கல்வி, மருத்துவம், மருத்துவமனைகள், வரி, வங்கி, அறங்கூற்று, சட்டம், மண் என்று அனைத்து அதிகார மையங்களையும் ஓரிடத்தில் குவித்து வருகிறது நடுவண் பாஜக அரசு. அது அறமன்று என்று அறிவுறுத்தும் வகைக்காவே கொரோனா தாக்குதல் என்பதாக- 

கொரோனா பரவலை முறியடிக்க குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரும் தனித்தியங்கினால் தான் பாதுகாப்பு என்னும் அதிகாரப் பரவலாக்கத்தை கொரோனா மூலம் உருத்து வந்து ஊட்டுகிறது அறம்!  
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
என்று சிலப்பதிகாரம் இதனைத் தெளிவு படுத்தும். 

இதனாலேயே கொரோனா மூலமாக அறிவிக்கப்பட்ட அறத்திற்கு அஞ்சி தமிழக அரசு ஒரேநாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது. அதை நடுவண் பாஜக அரசு தட்டிக் கேட்க முடியாது. விடையை கொரோனா மூலம் அறம் தன் பதிலைச் சொல்லும்.

இவ்வளவு களோபரத்திலும் விடாமல் முன்பு, தான்அறிவித்திருந்த வங்கிகள் இணைப்பை கையிலெடுத்திருக்கிறது நடுவண் பாஜக அரசு. பத்து பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன.

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியும், நடுவண் அரசும் ஏற்கெனவே அறிவித்திருந்தன. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வங்கி இணைப்பு திட்டம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன.

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைகின்றன. இதன்மூலம் இந்திய மாநில வங்கிக்கு அடுத்து 2வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேசனல் வங்கி மாறுகிறது. 

சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படுகிறது. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பொரேசன் வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பின்மூலம், இந்திய மாநில வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேசனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும். 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் என 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். 

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், காணொளி கலந்துரையாடல் மூலம் இந்த இணைப்பு நிகழ்ச்சியை நடத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.