நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக வெளியான செய்தியின் சூடு குறைவதற்குள் அடுத்த அடவடியை தமிழகத்தின் மீது நிகழ்த்தி தமிழகத்தை சூடேற்றியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கில் பாமரமக்கள் வருவாய் இழப்புக்கும், வறுமைக்கும் உதவாத நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோராப்பட்;ட கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறது. இந்தச் செய்தி வெளியாகி ஒட்டுமொத்த இந்திய மக்கள் சூடாகியிருக்கும் நிலையில், தமிழக மக்களைத் தனித்துச் சூடேற்ற அடுத்த ஒரு அடாவடியை முன்னெடுத்திருக்கிறது நடுவண் பாஜக அரசு. நடுவண் அரசின் அதிகாரப்பாட்டில், உரிய நிவாரணம் ஏதும் இல்லாமல் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்கில், நாடுமுழுவதும் எண்பது விழுக்காட்டு மக்கள், வருமானம் இல்லாமல், வறுமையில் உழன்று வருகின்றனர். இந்த நிலையில், சத்தம் இல்லாமல், நடுவண் பாஜக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தை நடுவண் நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த முயற்சியை உடனே கைவிட வேண்டுமெனவும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு அதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமெனவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது எனவும் சீமான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அவர்களும் நடுவண் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு தமிழ் அறிஞர்களும், காவிரி கழிமுகப்பகுதி வேளாண் பெருமக்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றார்கள். காவிரி மேலாண்மை ஆணையத்தை நடுவண் நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுசெல்லக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவரும் வேளையில், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவோ, ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களை வறுமை, பசிக்கொடுமையிலிருந்து மீட்டெடுக்கவோ உருப்படியான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்காத நடுவண் பாஜக அரசு, நோய்த்தொற்று அச்சத்தால் மக்களின் கவனம் திசைதிரும்பியுள்ள நேரத்தில், எவ்விதப் போராட்டத்திலும் மக்கள் ஈடுபடமுடியாது என்ற எண்ணத்தில் தொடர்ந்து மக்கள் விரோத செயல்களைத் செய்து வருகிறது என்று, கொரோனா ஊரடங்கிற்கு நிவாரணம் வழங்க கையாலாகாத அரசாக உள்ளது என்றும் கண்டித்திருக்கின்றார். மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களை மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது நடுவண் பாஜக அரசு. அதில் ஒன்றுதான், தற்போது காவிரி மீதான தமிழக உரிமையைப் பறிக்கும் விதமாக இந்திய நீர்வளத்துறை திருத்த விதிகள் என்ற பெயரில் நடுவண் அரசு வெளியிட்டுள்ள ஆற்றுநீர் கட்டுப்பாட்டு விதிகளாகும் என்று தெரிவித்துள்ளார் சீமான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



