Show all

நடுவண் அரசின் பொறுப்பற்ற செயல்முறைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதில் நடுவண் அரசின் பொறுப்பற்ற செயல்முறைகளைக் கண்டித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அதிரடி அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நம்பிக்கை உண்டு. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்பதற்கான அறிகுறிகள் அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களைச் செல்லாது என்று அவர் அறிவித்தார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற முடியாததால், கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ரூ.500, ரூ.1,000 தாள்களை அக்கட்சி தலைமையிலான நடுவண் அரசு திரும்பப் பெற்றுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் எவ்விதத் துன்பமும் அடையவில்லை. ஏனென்றால் அவர்கள் அரசிடம் உரிமம் பெற்ற துறைகள் மூலமாக பெறும் வருமானத்திற்கு பகுதிக்கு வரி செலுத்தி மிகுதியை மாதா மாதம் பதுக்கிக் கொண்டிருப்பவர்கள். போன மாதம் வரையான பதுக்கல் வெளிநாட்டு வங்கிகளுக்குப் போயிருக்கும்; இந்த மாத பதுக்களை ஆங்காங்கே வீசி விட்டார்கள்; அடுத்த மாத பதுக்களை சட்ட நிருவாகத்தின் சந்து பொந்துகளில் புகுந்து முறை படுத்தக் கற்றுக்கொண்டு விடுவார்கள். மாறாக, நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள்தான் வங்கிகள் மற்றும், ஏடிஎம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர். ரூபாய் தாள் திரும்பப் பெறுவதில் பொது மக்களின் மீதான நடுவண் அரசின் அடக்கு முறைகளைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ரூபாய் தாள் திருப்புதல் அறிவிப்புக்குப் பிறகு, கடந்த 9-ஆம் தேதியில் இருந்து நாட்டில் பொருளாதாரச் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. புதிய ரூபாய் தாள்களை அச்சடிக்க 250 நாள்கள் ஆகலாம். அன்றாடத் தேவைகளுக்காக இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரொக்கப் பணத்தையே பயன்படுத்தும் நிலையில்- தற்போது ஏற்பட்டுள்ள சூழலோ மிகவும் வித்தியாசமானது. ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை நாட்டில் உள்ள 2 விழுக்காட்டினரே பயன்படுத்துகின்றனர் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.