Show all

ஆச்சார்யாவை நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமிக்க வலியுறுத்தல்: அசாம் முதல்வர் தருண்கோகாய்

இந்தியா இந்துக்களுக்கே என அரசியல் சாசனத்திற்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவித்த தங்கள் மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவை நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமிக்குமாறு அசாம் முதல்வர் தருண்கோகாய் வலியுறுத்தியுள்ளார்.

அசாம் மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யா, கவுகாத்தியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டபோது, பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் ஒடுக்கப்படும் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் அடைக்கலம் அளிக்க நடுவண் அரசு முன்வந்துள்ளது குறித்து கேட்கப்பட்டது. அந்த முடிவை வரவேற்ற ஆச்சார்யா இந்தியா இந்துக்களுக்கே எனத் தெரிவித்தார்.

அசாம் ஆளுநரின் இந்தக் கருத்து அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடுவண் அரசு பி.பி.ஆச்சார்யாவை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கள் மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யா ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பாளர் போல் செயல்படுவதாக கூறிய காங்கிரஸ் ஆளும் அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய், பதவியேற்கும்போது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக செயல்பட மாட்டேன் என எடுத்த உறுதி மொழியை பி.பி.ஆச்சார்யா மீறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவரை பதவியிருந்து நீக்கி விட்டு அசாமிற்கு புதிய ஆளுநரை நியமிக்குமாறு மத்திய அரசை தருண்கோகாய் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே புத்தக வெளியீட்டுவிழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டதாக பி.சி.ஆச்சார்யா விளக்கமளித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.