Show all

அப்துல் கலாமின் நிறம் மாற்றும் முயற்சிகள்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை மோடி சூலை 27 அன்று திறந்து வைத்தார்.

இந்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற அப்துல் கலாம் சிலைகளில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கலாம் அவர்கள் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டும் அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இடம்பெற்றது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தச் சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குர்ரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் ஞாயிற்றுக்கிழமை வைத்தார்.

நான் கலாம் அவர்களுடன் 6 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். அவரது அலுவலகத்தில் எப்போதும் அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், பகவத் கீதை மட்டும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய காரணத்தால் இதைச் செய்தேன்.

இதுகுறித்து நடுவண் அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன். அவர்கள் விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த 2 நாட்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அந்தச் சிலை அருகில் ஒரு கண்ணாடிப் பேழையில் குர்ரானும், பைபிளும் வைக்கப்பட்டிருந்தது. அதையே வெளியே எடுத்து வைத்தேன். என்றார்.

தன்தாய் மொழியான தமிழ் மொழி மீது அப்துல்கலாமிற்கு பெருங்காதல் இருந்தது. தொடக்கக் கல்வியை தமிழ் வழியாக பயின்ற அவர்,

இந்தியா போற்றும் விஞ்ஞானியாக மாறிய பின்னும், வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் தாய் மொழியில் உரையாடலை நிகழ்த்தினார்.

திருக்குறளைத் தன் வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்தார். அவர் ஆற்றிய உரையாடல்களில், திருக்குறள், மற்றும் தமிழ் இலக்கிய மேற்கோள்களே காட்டப்பட்டன.

ஐரோப்பா பாராளுமன்றத்தில் பேசிய போது கூட கணியன் பூங்குன்றனாரின்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற புறநானூற்று வரிகளைப் பேசி அரங்கம் அதிர வைத்தவர் கலாம்.

சீனக்கவிஞர் யூசியிடம், தமிழ் திருக்குறள் நூலையும், அதற்கான ஆங்கிலமொழி பெயர்ப்பையும் வழங்கினார். திருக்குறளின் பெருமையை சீனர்கள் அறிய அதை சீன மொழியில் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

திருக்குறளை 5 ஆண்டுகளாக வாசித்து அதன் தத்துவத்தை உணர்ந்த சீனக்கவிஞர் யூசி, 2011ம் ஆண்டு உலகக்கவிஞர்கள் மாநாட்டில் கலாம் முன்னிலையில் சீனமொழியில் எழுதப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.

கலாமின் கனவுகளில் தலையாயது அனைவரும் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான்.

தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே, தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றைக்குத்தான் தமிழ் வளரும். அதாவது, தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், அறங்கூற்று, வங்கித் துறை செயல்பாடுகள், அரசியல், திரைப்படம், ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, தமிழ் மென்மேலும் செழித்து வளரும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் மொழி மீது ஆர்வம் உள்ளவர்கள், தமிழ்த் துறையின் தலைவர்கள், தமிழ் படிக்கும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர், ‘அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர் கல்வி, ஆராய்ச்சித் துறைகளில் பயன்பாட்டு மொழியாகத் தமிழைக் கொண்டு வரத் தேவையான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்என்பதே கலாமின் கனவு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.