13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகம் மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். மக்தம்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அண்;மையில் இறந்துவிட்டார். மகள் மீதுள்ள பாசத்தால் சோகத்தில் இருந்து வந்தார். அப்பொழுது தான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது மகள் போன்ற மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து, இந்தாண்டு தனது பள்ளியில் படிக்கும் சில ஏழை மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை கட்டியுள்ளார். இதுகுறித்து பசவராஜ் கூறுகையில், இந்த ஆண்டு முதல் ஏழை மாணவிகளின் கல்வி கட்டணம் கட்ட முடிவுசெய்தேன். அதன்படி சிலருக்கு பணமும் கட்டியுள்ளேன். வரும் ஆண்டுகளில் இதை தொடர்ந்து செய்யவுள்ளேன் என தெரிவித்தார். இதுதொடர்பாக பள்ளி மாணவிகள் சிலர் கூறுகையில், இங்கு படிக்கும் நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களில் சிலர் கல்வி கட்டணத்தை கட்ட முடியாத நிலையில் உள்ளோம். இந்த ஆண்டு முதல் பசவராஜ் ஐயா எங்களில் சிலருக்கு கல்வி கட்டணத்தை கட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது இந்த செய்கை இறந்துபோன அவரின் மகளுக்கு நிச்சயம் மன அமைதியை தரும் என குறிப்பிட்டுள்ளனர். மகள் இறந்த சோகத்தை மறைக்க பள்ளி மாணவிகள் பலரின் கல்வி கட்டணத்தை கட்டி வரும் பள்ளி ஊழியரான பசவராஜுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பண்புடையார்ப் பட்டுண்டு உலகு அது இன்றேல் மண்புக்கு மாய்வது மண்: திருக்குறள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,863.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



