ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச் சேவையை வணிகப்பாடாக சோதனை செய்த நாட்டின் முதல் இணையச்சேவை நிறுவனமாக இப்போது ஏர்டெல் திகழ்கிறது. 16,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச் சேவைக்கு அணியமாகிவிட்டதாகத் தெரிவித்து, இனி ஏர்டெல் இணையச் சேவை உறுப்பினர்களுக்கு ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச் சேவை என்கிற தரமுயர்த்தல் செய்தியை வழங்கியிருக்கிறது. ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச் சேவையை வணிகப்பாடாக சோதனை செய்த நாட்டின் முதல் இணையச்சேவை நிறுவனமாக இப்போது ஏர்டெல் திகழ்கிறது. ஏர்டெல் தனது 1800 மெகா ஹெர்ட்ஸ் தாராளமயமாக்கப்பட்ட அலைக்கற்றை இணைப்பு மூலம் ஹைதராபாத்தில் நேரடி ஐந்தாம் தலைமுறை சேவைகளைச் சோதனை செய்து அதன் ஆற்றலை நிரூபித்துள்ளது. ஏர்டெல்லின் புதிய ஐந்தாம் தலைமுறை சேவையின் கீழ் பயனர்கள் பெரிய திரைப்படங்களை சில நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. ஏர்டெல் 4ம் தலைமுறை மற்றும் 5ம் தலைமுறை இரண்டையும் ஒரே அலைக்கற்றைத் தொகுதியில் ஒரே நேரத்தில் ஏர்டெல் இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாரதி ஏர்டெல் தனது ஐந்தாம் தலைமுறை இணையச்சேவை இப்போது பயன்பாட்டிற்குத் தயார் என்று கூறியுள்ளது. ஏர்டெல் காந்தப்புல அலைக்கற்றை பகிர்வு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் ஐந்தாம் தலைமுறை இணையச் சேவையைத் தயார் செய்துள்ளது. இதன் பொருள் ஏர்டெல் அதன் தற்போதைய தொழில்நுட்ப நடுநிலை (1800/2100/2300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் துணை ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் (800/900 மெகா ஹெர்ட்ஸ்) மூலம் ஐந்தாம் தலைமுறை சேவைகளை வழங்க முடியும் என்று கூறியுள்ளது. நாட்டின் முதல் ஐந்தாம் தலைமுறை சேவை இப்போது சில எளிய மென்பொருள் மேம்படுத்தல்களுடன் எளிதாக மாற்ற முடியும் என்று ஏர்டெல் கூறியுள்ளது. தற்போதைய ஆண்டெனாக்கள் மற்றும் ரேடியோ சாதனங்களை வைத்து இதை எளிதாக செய்து முடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஜியோ நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் ஐந்தாம் தலைமுறை தயாராகும் என்று கூறியிருந்தது. இப்போது ஏர்டெல் ஓசைஎழுப்பாமல் சோதனை செய்து முடித்து, ஐந்தாம் தலைமுறை வழங்கும் நாட்டின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது. ஜியோவை முந்தி முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, இந்திய ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்டால், சில மாதங்களில் ஐந்தாம் தலைமுறை இணையச்சேவையை மக்கள் பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல் கூறியுள்ளது. பயனர்கள் நான்காம் தலைமுறை மற்றும் ஐந்தாம் தலைமுறை இரண்டையும் ஒரே அலைக்கற்றைத் தொகுதி மூலம் பெற முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.