முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. எதிர்ப்பாளர்கள் முப்பது பேர்கள் வாக்களிக்காத நிலையில், மாநிலங்களவையில், இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேறியுள்ளது. 14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேறியது. மக்களவையில் முத்தலாக் தடை சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்ட போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் தடை சட்டமுன்வரைவை ஆதரித்து பேசி வாக்களித்தார். அதேசமயம் செவ்வாயன்று மாநிலங்களவையில் இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட போது, நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது உச்ச அறங்கூற்றுமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவானது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு இதனை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு, வெளிநடப்பு செய்தனர். இவர்களைப் போல ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்களும் முத்தலாக் தடை சட்டமுன்வரைவு குறித்த வாக்கெடுப்பில் பங்குபெறாமல் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே முத்தலாக் தடை சட்டமுன்வரைவு மாநிலங்களவையில் செவ்வாயன்று நிறைவேறியது. முத்தலாக் தடை சட்டமுன்வரைவு மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர் அதன்மீதான ஓட்டெடுப்பு தொடங்கியது. முன்பு போல் மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் வாக்குச் சீட்டு முறையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட காட்சிகள் முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு எதிராக வாக்களித்தன. ஐந்து காலியிடங்கள் போக தற்போது மாநிலஙகளவையின்; பலம் மொத்தம் 240 உறுப்பினர்கள். இங்கு முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேற வேண்டும் என்றால் 121 உறுப்பினர்கள் பலம் வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 110 உறுப்பினர்கள் பலம் இருக்கிறது. இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்: திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, அதிமுக ஆகியன. இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள்: பாஜக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு. இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வாக்களிக்காத கட்சிகள்: தெலுங்கு தேசம் கட்சியின் 2 உறுப்பினர்கள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் 6 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 4 உறுப்பினர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 1 உறுப்பினர், அதிமுகவின் 11 உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 6 உறுப்பினர்கள் என முப்பது பேர்கள். இந்த வெளி நடப்பு செய்த முப்பது பேர்களும் இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவு மாநிலங்களவையில் நிறைவேற பாஜக அரசுக்கு உள்ளடி வேலை செய்திருக்கிறார்களா என்ற கேள்வி மக்கள் மக்கள் நடுவே எழுப்பப் படுகிறது. இதனால் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பு 30 பேர் என்பதால் முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேறியது. இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த முதன்மை எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதால் மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேறியது. இந்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் எல்லாம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எதிர்த்து வாக்களித்து இருந்தால் மசோதா தோல்வி அடைந்து இருக்கும். ஆனால் இவர்கள் வெளிநடப்பு செய்ததால் மசோதா வெற்றிபெற்றது. சரி இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவு உண்மையில் முஸ்லிம் பெண்களை பாதுகாக்குமா? அவசரகதியில் இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவை தயாரித்திருப்பதாக நடுவண் அரசு மேல் குற்றம் சுமத்தும் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், அறங்கூற்றுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டமுன்வரைவு பற்றிய விவாதத்தின் போது, முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது மற்றும் மரியாதையை பெற்றுக்கொடுப்பது பற்றி பேசப்பட்டது. ஆனால், நடுவண் அரசோ, தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவனை சிறைக்கு அனுப்புவதாக முடிவெடுத்தால், திருமணம் என்ற பந்தமே நிலைக்காது. பிறகு எங்கிருந்து உரிமையும், மரியாதையும் கிடைக்கும்?” என்று நிதர்சனத்தை கேள்விக்கணையாக தொடுக்கிறார். ஒருபக்கம் முத்தலாக் செல்லாது என்பதும், இன்னொரு புறம் தலாக் கூறிய கணவன் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று சொல்வதும் அபத்தத்தின் உச்சம். விவாகரத்து செல்லாது என்றால், திருமணம் தொடர்கிறது என்றால் எதற்காக ஜீவனாம்சம்? முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் பெண்ணிடமே, மைனர் குழந்தைகளின் பொறுப்பு ஒப்படைக்கப்படும், கணவனை சிறைக்கனுப்பினால் மனைவி என்ன செய்வார் தன் குடும்பத்தை பராமரிக்க? சிறைக்குச் செல்லும் கணவர் எப்படி ஜீவனாம்சத்திற்கான நிதி ஆதாரத்தை திரட்டமுடியும்? முத்தலாக்கை எதிர்த்து சட்ட உதவியை எதிர்பார்க்கும் பெண் கணவருடன் வாழ்வதற்காகவும், பொருளாதார பாதுகாப்புக்காகவுமே அறங்கூற்றுமன்றத்தின் ஆதரவை நாடுகிறார். ஆனால் கணவனை சிறைக்கு அனுப்பினால் அந்த பெண்ணுக்கு தேவைப்படும் இரண்டு அடிப்படை ஆதரவுமே கேள்விக்குறியாகிவிடும். முத்தலாக் தடையால் அப்பெண்ணின் மறு வாழ்வும் தடைபடுகிறது சிறையில் இருக்கும் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினர் அல்லது அரசு என யார் ஜீவானாம்சம் கொடுப்பார்கள் என்பது தெரியாமல் ஜீவனாம்சத்தை எப்படி நிர்ணயிப்பது? இந்த ஜீவனாம்சம் எத்தனை மாதம், ஆண்டு எவ்வளவு தரவேண்டும்? இத்தகைய எண்ணற்ற கேள்விகளுக்கு மோடியின் முத்தலாக் தடை சட்டமுன்வரைவில் எந்த விளக்கமும் இல்லை. இவைபோக கடும் விமர்சனத்திற்குள்ளாயிருப்பது முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை என்ற விதிதான். முத்தலாக் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகிறது. ஓர் அடிப்படைக் கேள்வி, திருமணம் சிவில் சட்டங்களின் கீழ்தான் வரும், அது தொடர்பான பிரச்சினை எப்படி குற்றவியல் வரையறைக்குள்ளாகும்? மேலும் மனைவி என்றல்ல. எவர் வேண்டுமானாலும் ஒரு முஸ்லீம் கணவர் தன் மனைவி மீது தலாக் சொல்லிவிட்டார் எனப் புகார் கூறிவிட்டால், அந்தக் கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிடலாம். இந்தப் பகுதிதான் இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவின் நோக்கத்தையே சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு சிக்கலில், யார் வேண்டுமானாலும் புகார் தரலாம் என்பது எத்தகைய ஆபத்தான பிரிவு என்பதும், இந்தச் சட்டத்தை கொண்டு வருவது, வெளிப்படையாகவே இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கும் ஒரு கட்சி என்பதையும் மறக்க முடியாது. கோரக்பூர் சாமியார் முதல்வராக இருக்கும் உத்திரபிரதேசத்தில் மட்டுமல்ல, பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலுமே இம்மாதிரியான கொடுமைகள் நாள்தோறும் நிகழும் வாய்ப்பு நிறையவே உண்டு. அந்த வகையில் இந்த புதிய சட்டம் முஸ்லிம் ஆண்களுக்கெதிரான சதி என்றால் அது மிகையில்லை. தலாக்கைப் பொறுத்தவரை அது பல முஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டிருப்பதும் உண்மையே. தலாக் விடயத்தில் மட்டும் அல்லாது பல அடிப்படை விடயங்களும் முஸ்லிம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. இஸ்லாமிய சட்டம் என்பதே மனிதர்கள் மனிதர்களுக்காக இயற்றி, மாற்றி திருத்திக் கொள்ளும் மனித சட்டங்கள் அல்ல என்பது அனைத்தும் முஸ்லிம்களின் அசையா நம்பிக்கை! இப்பின்னணியில், அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, பெண்கள் உரிமையைப் பாதுகாத்து, அதே நேரம் முஸ்லீம் சமுதாயம் தேவையில்லாத சிக்கல்களுக்கு ஆட்படாத வகையில், முத்தலாக் தடை சட்டமுன்வரைவை திருத்தி அமைக்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,229.
இஸ்லாமிய விவாகரத்து நடைமுறையான முத்தலாக் அங்கீகாரமற்றது என உச்ச அறங்கூற்றுமன்ற அரசியல் சாசன அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது. முத்தலாக் முறை தொடர்பாக நடுவண் அரசு ஆறு மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இதுதான் மோடி அரசின் முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கான முதல் சுழி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



