மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில் நாக்பூர்-மும்பை துரந்தோ விரைவு தொடர் வண்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொடர்வண்டியின் 5 பெட்டிகள் மற்றும் ஒரு எஞ்சின் தடம் புரண்டது. நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரெயில் நடைமேடை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு குறித்த எதுவும் இல்லை. இருப்பினும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அருகில் உள்ள கல்யாண் நகரில் இருந்து மீட்பு படைகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. இந்தச் சம்பவம் காலை 6.35 மணியளவில் நடைபெற்றது. வாசிந்த் மற்றும் அசங்கான் தொடர்வண்டி நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக தொடர்வண்டித் துறை சார்பில், ‘விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் உரிய இடத்தில் சேருவதற்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 தொடர்வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் மக்கள் நடுவே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உட்கல் விரைவு தொடர் வண்டி தடம் புரண்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



