Show all

காதி நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம்

காதி நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம். வெடிக்கும் புதிய சர்ச்சை! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் உள்ள காந்தியின் படம் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக மோடியின் படம் சேர்க்கப்பட்டுள்ளது.

                தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் காந்தியின் படம் நீக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவை தரப்படுவது வழக்கம்.

                இந்த நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் காந்தி ராட்டையில் நூல் நூற்கும் படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில்; காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி நூல் நுற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று உள்ளது. காலண்டர்களில் மோடியின் படத்தைக் கண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஒரு அதிகாரி கூறும்போது, கடந்த ஆண்டு மோடியின் படம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காந்தியின் படம் முற்றிலும் நீக்கப்பட்டு, முழுவதுமாகவே மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். மேலும், காந்தியின் சிந்தனை, தத்துவம், கொள்கைகளை அரசு புறக்கணித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.