Show all

லாஸ்லியாவிற்கு இரண்டு படங்கள்! ஒன்று: விளையாட்டு வீரர் நடிக்கும் படத்திற்கு கதைத்தலைவியாக

பிரண்ட்சிப் எனும் படத்தில், கதைத்தலைவராக நடிக்கும், விளையாட்டு வீரர் ஹர்பஜனுக்குக் கதைத்தலைவியாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் லாஸ்லியா நடிக்கும் மற்றொரு படத்தற்கு இன்று பூசை போடப்பட்டது. 

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழப்பெண் லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானார். தொடக்கத்தில் விஜய் தொலைக்காட்சியின் ஒட்டு மொத்த பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் கண்பட்டது போலவோ, விஜய் தொலைகாட்சியின் இலக்குத்தர (டிஆர்பி) நோக்கத்திற்கு இரையாகி விட்டதாலோ, கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்களின் வெறுப்பிற்கு ஆளானார். 

பிக்பாஸ் தனது அனைத்து படக்கருவிகளையும் கவின்- லாஸ்லியா மீதே திருப்பி அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற இலக்கு தரத்திற்காக லாஸ்லியாவை இரையாக்கி, தொடக்கத்தில் இவரே வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அப்பாவை அழைத்து, அறிவுரையாளர்களை யெல்லாம் அழைத்து, லாஸ்லியாவை நன்றாகக் குழப்பி, முடிந்த வரை அவர்மீது சேற்றை வாரிஇறைத்து, வெற்றியைத் தட்டிப் பறித்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத்துறையில் நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறினார். இதையடுத்து லாஸ்லியா எப்போது திரையில் அறிமுகமாவார் என்று ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் இன்று பூசையுடன் தொடங்கியுள்ளது.

இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆரி கதைத்தலைவராக நடிக்க, ஸ்ருஷ்டி டாங்கே கதைத்தலைவியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் லாஸ்லியா திரைத்துறையில் அறிமுகமாகிறார். நகைச்சுவை நடிகர் செந்திலும் இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்திரா மீடியா விசன் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் முதன்மையான சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் நீண்ட நாட்களாக ‘இந்தியன் முதன்மைக் கூட்டமைப்பு’ (ஐபிஎல்;) போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மகேந்திர சிங் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிவருகிறார்.

இவர் சென்னைக்கு வந்த நாளிலிருந்து தமிழ் ஆர்வலராக இருந்து வருவதோடு, தன் கலையார்வத்தால், திரைப்படத்தில் கதைத்தலைவனாகவும் நடிக்கத் தொடங்கி விட்டார். இவர் நடிக்கும் படத்திற்கு பிரண்ட்சிப் என்று  பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில்தான் கதைத்தலைவியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.