20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எண்ணிம முறையில் படங்களைத் திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நான்காவது நாளாக படதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஆந்திராவிலும் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. இதன் காரணமாக புதிய படங்களை திரையிடக் கூடாது என்று தயாரிப்பாளர்களக்கு, தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இதை மீறி படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, திரைக்கு வரத் தயாராக இருந்த புதிய படங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், இந்த மாதம் திரைக்கு வர வேண்டிய 20 படங்கள் வேறு ஒரு நாளை எதிர்பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர்களின் தடையை மீறி ‘தாராவி’ என்ற புதிய படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இதில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதுபோல் ‘யாழ்’ என்ற படமும் வெளியாகி உள்ளது. இது ஈழதமிழர் போர் பற்றிய படம். தடையை மீறி ‘தாராவி’ படத்தை வெளியிட்டது ஏன் என்பது குறித்து அதன் தயாரிப்பாளர் பவித்ரன் கூறியதாவது: இந்த படம் மும்பை தாராவியில் வாழும் தமிழ் இளைஞர்கள் பற்றிய கதை. 110 நாட்கள் தாராவியில் தங்கி இருந்து படத்தை எடுத்தோம். கடன் வாங்கி படம் தயாரித்திருக்கிறோம். ஏற்கனவே, இந்த படத்தை இந்த நாளில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். இது சிறிய வரவு-செலவுத் திட்டப் படம். தாமதம் ஆனால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியது இருக்கும். பெரிய நடிகர்கள் படம் வெளியீட்டின்; போது, திரையரங்குகள் கிடைக்காது. எனவே, இந்தப் படத்தை வெளியீடு செய்தோம். சிறிய தயாரிப்பாளர்களைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது தவறு. இதற்கு வேறு வழிமுறைகளை காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுபோல், ‘யாழ்’ திரைப்படமும் நேற்று திரைக்கு வந்துள்ளது. ஏற்கனவே, திரைக்கு வந்து திரையரங்கு கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப் படம் இப்போது மீண்டும் திரைக்கு வந்திருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,716.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



